நூன்மரபு256

பொருள் :ஐகார ஈற்றுத்  திங்கட்பெயரும் நாட்பெயரும் இகர ஈற்றுள்
கிளந்துகூறிய     அவ்விதியினவாகும்.    என்றது;     திங்கட்பெயருக்கு
இக்குச்சாரியையும், நாட்பெயருக்கு ஆன்சாரியையும் வரும் என்றவாறு.
 

எ. டு:தைக்குக்கொண்டான்,   சித்திரைக்குக்கொண்டான்   எனவரும்.
இவை திங்கட்பெயர். கேட்டையாற் கொண்டான், சித்திரையாற் கொண்டான்
எனவரும். இவை நாட்பெயர்.
 

சூ. 287 :

மழையென் கிளவி வளியியல் நிலையும்(85)
 

க-து :

மழையென்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :மழை என்னும் சொல் வளியென்னும் சொல்லியல் பிற்றாய்
அத்துச் சாரியையும் இன்சாரியையும் பெறும்.
 

எ. டு:மழையத்துக்  கொண்டான்,  மழையிற்  கொண்டான், சென்றான்,
தந்தான்,  போயினான்  எனவரும்.  வருமொழி  வரையாது கூறினமையின்
மழையத்து  ஞான்றான்,  வந்தான்,  அடைந்தான் என இயல்புகணத்தொடு
வருதலும் கொள்க.
 

“திங்களை  முற்கூறிய  முறையன்றிக்  கூற்றினான்’’ எனமிகை கொண்டு
நச்சினார்க்கினியர் கூறும் சில சொல்முடிபுகள்  ஈண்டைக்கு ஏற்பன அல்ல.
அவற்றுள்  பல  பொதுவிதியுள்  அடங்கும். சில புறனடையாற் கொள்ளத் தக்கவையாம்.
 

சூ. 288 :

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்

ஐயென் இறுதி அவாமுன் வரினே

மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர்

டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்

(86)
 

க-து :
 

வேட்கை   என்னும்  சொற்குச்  செய்யுள்  வழக்காகிய  முடிவு
கூறுகின்றது.
 

பொருள் :செய்யுள்       வழக்கின்கண்     வேட்கை     என்னும்
சொல்லிறுதியாகிய   ஐகாரம், அவா என்னும் சொல் வருமொழியாக வரின்
தான்  ஊர்ந்து   நின்ற  மெய்யொடும்  கெடும். ஆண்டு  நின்ற  டகாரம்
ணகாரமாகத் திரிதல் வேண்டும்.
 

எ. டு:வேட்கை+அவா = வேணவா. “வேணவா நலிய  வெய்ய உயிரா”
(நற் - 61)  எனவரும்.  வேட்கையான்  எழுந்த  அவா  என்பது பொருள்.
வேட்கையவா எனப் பொதுவிதியாற் புணரின் அல்வழியாம். வேட்கையாகிய
அவா   என்பது  பொருள்.  வேட்கை  என்பது  வேண்  எனத் திரிதற்கு
வருமொழி காரணமாகாமையின் செய்யுள் வழக்காயிற்றென உணர்க.