இறைவன் அருள்கிட்டினால் எவரும் எதையும் செய்ய இயலுமல்லவா, தமிழ்த்தெய்வம் இப்பணிக்கு இவரைக் கருவியாகக் கொள்ள எண்ணியுள்ளது போலும், என நினைத்து உன் விருப்பப்படியே செய், அம்பிகையின் அருளால் எல்லாம் சிறப்பாக முடியும் என்று உளமார வாழ்த்தியனுப்பினேன். காணும்போதெல்லாம் அது பற்றிக் கேட்டு மகிழ்ந்து உற்சாகமூட்டி வந்தேன். இவருடைய பொருளாதார நிலையை ஓரளவு அறிவேனாதலால், இந்நூலை வெளியிட ஆகும் செலவைச் சில நல்லன்பர்களை ஏற்கச் செய்யலாம் எனக்கருதி ஒரு சமயம் அது பற்றிக்கூறினேன். அப்பொழுது ‘சுவாமி அந்தப் பொறுப்பையும் நானே ஏற்கும்படியான வாய்ப்பை இறைவன் எனக்கருள வாழ்த்துங்கள்’ என்றார். உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும் என வாழ்த்தினேன். அவ்வாறே இறைவன் திருவருளால் இப்பொழுது எழுத்ததிகார உரை வெளி வருகின்றது. மற்றவை தொடர்ந்து விரைவாக வெளிவர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். |