நூன்மரபு262

சூ. 301 :

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே(6)
 

க-து :

இதுவுமது.
 

பொருள் :மேற்கூறிய   வெரிந்  என்னும்  சொல்   இறுதி  முழுதுங்
கெட்டவிடத்து   மெல்லெழுத்தேயன்றி   வல்லெழுத்து  மிகுதலும் அதற்கு
உரித்தாகும்.
 

எ. டு:வெரிக்குறை,  சுழி,  தோல், பொலிவு எனவரும். இஃது அருகிய
வழக்காகலின் உம்மை இழிவு தோன்ற நின்றது.
 

சூ. 302 :

ணகார இறுதி வல்லெழுத் தியையின்

டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே 

(7)
 

க-து :

ணகார ஈறு வேற்றுமைக்கண் புணரும் பொதுவிதி கூறுகின்றது.
 

புள்ளியீறுகளின்  திரிபு, வேற்றுமைப்  புணர்ச்சிக்கண் மிக்கு நிகழ்தலின்
இவ்வியலுள்  பெரும்பான்மையும் வேற்றுமைப் புணர்ச்சி முற்கூறிப் பின்னர்
அல்வழிப் புணர்ச்சி கூறுகின்றார்.
 

பொருள்:  ணகர ஒற்றினை  இறுதியாக  உடைய பெயர், வேற்றுமைப்
பொருட்  புணர்ச்சிக்கண்  வல்லெழுத்துவரின்  ணகரம் டகரமாகத் திரியும்.
பொருட்கென்றது வேற்றுமை மயக்கம்.
 

எ. டு:  மட்குடம், சாடி, தூதை, பானை எனவரும். கூறப்படும் விதிகள்
உருபொடு     புணர்ந்து     நிற்கும்    மொழிகட்கும்    ஒக்குமென்பது
மேல்விளக்கப்பட்டமையான்   ஏழாவதன்  உருபு  புணர்ந்து  ணகர ஈறாக
நிற்கும்  சொற்களுக்கும்  இவ்விதி  ஒக்கும்.  எ.டு : அவன்கட் சென்றான்,
ஆங்கட்சென்றான் எனவரும்.
 

சூ. 303 :

ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை(8)
 

க-து :

ஆண் பெண் என்னும் பெயர்கட்கு எய்தியது விலக்குகின்றது.
 

பொருள்:  ஆண், பெண்  என்னும்  விரவுப்  பெயர்கள்,  அஃறிணை
விரவுப் பெயர்க்குக் கூறிய இலக்கணத்தைப் பெறும்.
 

என்றது : ‘‘அஃறிணை  விரவுப்பெயர் இயல்புமா ருளவே’’ (தொகை-13)
என்னும்  விதிப்படி  இயல்பாகப் புணரும் என்றவாறு. அஃறிணை இயற்கை
என்றதனான்   இவை  உயர்திணைப்  பொருளவாய்   நிற்பவை  என்பது
புலப்படும்.
 

எ. டு:  ஆண்கல்வி - பெண்கல்வி, சால்பு,  திட்பம், பண்பு எனவரும்.
ஆண்கை; பெண்கை, செவி, தலை, புறம் எனக் காட்டின், கை முதலியவை
இருதிணைக்கும் பொதுவானவை