சூ. 310 : | மகர இறுதி வேற்றுமை யாயின் |
| துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே |
(15) |
க-து : | மகர ஈறு வேற்றுமைக்கண் புணருமாறு பொதுவிதி கூறுகின்றது. |
|
பொருள் : மகர ஒற்றினை ஈறாக உடைய பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், மகரம் முற்றக்கெடும். அவ்வழி வல்லெழுத்து வரின் மிகும். ஞாபகத்தான் ஏனைக்கணம் வரின் மகரம்கெட்ட நிலையில் விதியீறாக நின்றுபுணரும் என்க. |
துவரக்கெடும் என்றும், கெட்டவழி விதியீறாக நிற்ப, வரும் வல்லெழுத்து மிகும் என்றும் பொருள் கொள்க. |
எ.டு :மரக்கோடு, மரச்செதிள், மரத்தோல், மரப்பூ என வரும். தொண்டகப்பறை, முண்டகக்கோடு எனவும் ஒட்டிக் கொள்க. ஏனைக்கணத்து; மரநார், மரவேலி, மரவுரல் எனவரும். |
‘வல்லெழுத்து மிகுமே’ என்றதனான் ஏனையெழுத்துக்கள் மிகா என்பது ‘‘எடுத்த மொழிஇனம் செப்பலும் உரித்தே’’ (கிளவி - 61) என்பதனான் அமைதலை ஓராமல் இவற்றைத் ‘துவர’ என்னும் மிகையாற் கொள்வர் உரையாசிரியன்மார். துவர என்பது மகரஈறு. யாண்டும் கெட்டே நிற்கும் என்பதை வற்புறுத்தி நிற்பதாகலின் அஃது மிகையாகாமையும் உணர்க. |
சூ. 311 : | அகர ஆகாரம் வரூஉங் காலை |
| ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே |
(16) |
க-து : | அகர ஆகாரம் வருமிடத்து ஒருசார் வழக்குப் பற்றிய விதி கூறுகின்றது. |
|
பொருள் : ஒருசார் மகர ஈற்றுச் சொற்கள் அகர ஆகாரங்கள் வருமிடத்து மகரம் கெட அதன்மிசை விதியீறாக நின்ற அகரம் நீளுதலும் உரித்தாகும். உம்மை எதிர்மறையாகலின் நீளாது வருதலும் ஆகும் என்பதாம். |
எ.டு:மர + அடி = மராஅடி; குள + ஆம்பல் = குளாஆம்பல் எனவரும். அகரம் நீடும் என்ற சிறப்பு விதியான் உடம்படுமெய் பெறாவாயின. உம்மையான் மரவடி, குளவாம்பல் எனவும் வரும். |
உரையாசிரியன்மார் அடுத்துவரும் நூற்பாவின்கண் உள்ள ‘‘வழக்கத்தான’’ என்பதனான் குளாஅம்பல் என ஆகாரத்தை அகரமாக்குக என்பர். அங்ஙனம் ஆக்கிக் கோடற்குக் காரணம் |