நூன்மரபு267

கூறினாரில்லை.  மற்று,  வருமொழி  முற்கூறியதனான்  கோணா கோணம்,
கோணாவட்டம் எனப் பிறவும் வேறுபட வருவனவற்றை எல்லாம்  கொள்க
என்பார்.  அவை  கோணத்துள்  கோணம்,  கோணத்துள்  வட்டம் எனப்
பொருள்  தந்து  நிற்றலின்  மரூஉ   முடிபாகக்   கொண்டு  புறனடையுள்
அடக்குதலே நேரிதென்க.
 

சூ. 312 :மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே
ஒல்வழி யறிதல் வழக்கத் தான
(17)
 

க - து :

ஒருசார்      சொற்கள்       மெல்லெழுத்தொடு     உறழ்ந்து
முடியுமென்கின்றது.
 

பொருள் :மகர   ஈற்றுள்   மெல்லெழுத்தொடு   உறழ்ந்து   நிற்கும்
சொற்களும்  உள,  வழக்கின்கண்  அவ்வாறு  இயலுமிடமறிந்து   கொள்க.
என்றது; எல்லாச் சொற்களும் உறழாஒல்லுவனவே உறழும் என்றவாறு.
 

எ. டு :குளங்கரை - குளக்கரை,  குளஞ்சேறு - குளச்சேறு   எனவும்
வலங்கை - வலக்கை,  வலஞ்செவி - வலச்செவி   எனவும்  வரும்.  இனி
உறழாதன  வருமாறு:  குளத்தாமரை,  குளக்கொட்டி,  இடச்செவி  எனவும்
வலந்தலை, பரங்குன்று எனவும் வரும்.
 

உருபு புணர்ச்சிக் கோதியவை ஒல்லும் வகையாற் பொருட்புணர்ச்சிக்கும்
வருமாகலான்  அத்துச்  சாரியை பெற்றுக் குளத்துக் கொண்டான், ஈழத்துச்
சென்றான் எனவும் வருமென்க.
 

ஆசிரியர்  முன்னும்  பின்னும் ‘‘ஒல்வழி’’ என்றே  கூறியுள்ளமையான்,
ஈண்டுச்  ‘செல்வழி’   என்பது   பாடமாகாமையும்   அதற்குப்   பொருட்
சிறப்பின்மையும் நோக்கியறிக.
 

‘புலம்புக்கனனே’,  ‘கலம்பெறுகண்ணுளர்’   என்பவை   மகரங்கெடாது
வந்தன  என்பார்  உரையாளர்.  இவை  மகரங்கெட்டு  வருமொழிக்கேற்ற
மெல்லெழுத்துமிக்கன  என்றதே  இலக்கண  நெறியாதலின்  அவர் கூற்று
ஒவ்வாதென்க.
 

சூ. 313 :

இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே(18)
 

க - து :

மகரஈற்று மரப்பெயர் ஒன்றற்குச் சாரியை கூறுகின்றது.
 

பொருள் :உறையுமிடத்தை உணர்த்தாமல் மரத்தை உணர்த்தி  வரும்
இல்லம்  என்னும்   பெயர்,   விசை   என்னும்   மரப்பெயர்க்கு   ஓதிய
இலக்கணத்ததாய் மெல்லெழுத்து மிக்குப் புணரும்.
 

எ. டு :இல்லங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.