பொருள் :சுட்டுவகர ஈறு ஒழிந்த ஏனை வகர ஈற்றுச் சொல்லாகிய தெவ் என்னும் உரிச்சொல்லீறு இருவழியும் ஞகார ஈற்றுத் தொழிற் பெயரியல்பிற்றாய் உகரம் பெற்றுப் புணரும். |
எ. டு: தெவ்வுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் தெவ்வுக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். ஞ ந ம என்பவற்றொடும் ஒட்டிக் கொள்க. தெவ்வு = பகைமை. |
இதனானும் தெவ் என்னும் சொல் வினைநிலை எய்தி வாராமை புலனாம். உகரம் பெறாமல் மகரத்தொடு புணருமிடத்துத் தெம்முனை, தெம்மடங்கிய எனவரும். காரணம் வகரம் மகரத்தொடு மயங்குதற்கு ஏலாமையான் மகரமாகத் திரியும். இதனைப் புறனடையாற் கொள்க. |
சூ. 383 : | ழகார இறுதி ரகார இயற்றே |
(88) |
க-து : | ழகார ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி ஆமாறு கூறுகின்றது. |
பொருள் : ழகார ஈற்றுப் பெயரிறுதி வன்கணம்வரின் ரகார ஈற்றிற்கு ஓதிய இயல்பிற்றாய் மிக்குப்புணரும். |
எ. டு: பூழ்க்கால், செவி, தலை, புறம் எனவரும். |
ரகார ஈற்றுச் சூத்திர உரையுள் அல்வழிக்குக் கூறியவிளக்கம் இதற்கும் ஒக்குமாதலின், ழகார ஈற்று அல்வழிக்கண் யாழ் குறிது, சிறிது, தீது, பெரிது என வல்லெழுத்து இயல்பாக முடியுமெனக் கொள்க. சிறுபான்மை வீழ்குறிது - வீழ்க்குறிது என உறழ்ந்து முடிதலையும் பூழ்ப்பறவை என இருபெயரொட்டின்கண் மிக்கு முடிதலையும் உரையிற்கோடல் என்னும் உத்தியாற் கொள்க. |
சூ. 384 : | தாழென் கிளவி கோலொடு புணரின் |
| அக்குஇடை வருதல் உரித்து மாகும் |
(89) |
க-து : | தாழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் :தாழ் என்னும் பெயர்ச் சொல், கோல் என்னும் சொல்லொடு புணரின், அக்கு என்னும் சாரியை இடையே வருதற்கு உரித்தும் ஆகும். உம்மை - எதிர்மறை. |
எ.டு : தாழக்கோல் எனவரும். உம்மையால் தாழ்க்கோல் எனவும் வரும். இத்தொகை, தாலிப்பொன் என்பது போலத் தாழிற்குரிய கோல் எனவிரியும். தாழாகிய கோல் என இருபெயரொட்டெனினும் ஒக்கும். கோல் என்பது கணைமரம். |