நூன்மரபு301

தாழ்   என்பது    தழுவு   என்னும்   சொல்லின்    திரிபாகும்.  அது
புதவக்கதவங்களைத் தழுவி (அடைத்து)  நிற்பதாகலின் காரணப்  பெயராம்.
அத்தாழினை வனைதற்குரிய  தடியே  ஈண்டுக்கோல்  எனப்பட்டதாகலின்,
நான்காவது விரிதலே சால்புடைத்தென்க.
 

உரையாசிரியன்மார்   தாழக்கோலினைத்   திறவுகோல்  எனக் கருதித்,
தாழைத் திறக்குங்கோல் என  இரண்டாவது விரியும் என்றனர். திறவுகோல்
என்பது திறக்கும் கருவி; அது தாழ் எனற் கொல்லாது.
 

சூ. 385 :

தமிழென் கிளவியும் அதனோ ரற்றே 
(90)
 

க-து :

தமிழ் என்னும் சொல்லும் அக்குப்பெற்று முடியும் என்கின்றது.
 

பொருள் :தமிழ்  என்னும்  ழகர ஈற்றுச்  சொல்லும் தாழ் என்பதற்கு
ஓதியாங்கு அக்குச்சாரியை பெற்றுப் புணரும்.
 

எ.டு :தமிழக்கூத்து, செய்தி, தூய்மை, பாணி எனவரும். தமிழிற்குரிய
கூத்து என நான்காவது விரிக்க. ஆரியக்கூத்து   அன்று    என்றவாறாம்.
உடைமைப்   பொருள்   விரிக்கின்      இச்சாரியை     ஆறனுருபாய்
மயக்கஞ்செய்யுமென்க.
 

மேலைச்சூத்திரத்து எதிர்மறை உம்மையான் தமிழ்க்கூத்து, தமிழ்ச்செய்தி
எனச் சாரியை இன்றியும் பொதுவிதியாற் புணருமென்க.
 

கோலொடு   புணரின்   என்றாற்போல  இதற்கு வருமொழி வரைந்து
கூறாமையான் ஏனைக்கணம்வரினும், சாரியைப் பேறு கொள்க.
 

எ. டு:தமிழஞாலம்,  தமிழநூல், தமிழமரபு, தமிழவாழ்வு, தமிழவரையர்
எனவரும்.
 

சூ. 386 :

குமிழ்என் கிளவி மரப்பெய ராயின் 
பீரென் கிளவியொடு ஓரியற் றாகும்
(91)
 

க-து :

குமிழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் : குமிழ் என்னும் சொல் தொழிற் பெயரன்றி மரப்பெயராயின்
பீர்    என்னும்   சொல்லொடு   ஒத்த   இயல்பிற்றாய் மெல்லெழுத்தும்,
அம்முச்சாரியையும் பெற்றுப்புணரும்.
 

எ.டு : குமிழ்ங்கோடு - குமிழங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.