நூன்மரபு302

‘‘ஓரியற்று’’  என்றதனான்   மகிழ்  என்னும்  மரப்பெயர்க்கும் இவ்விதி
கொள்க. மகிழ்ங்கோடு - மகிழங்கோடு எனவரும்.
 

சூ. 387 :

பாழ்என் கிளவி மெல்லெழுத் துறழ்வே 
(92)
 

க-து :

பாழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள்:  பாழ்  என்னும் பண்புப்பெயர் மெல்லெழுத்தொடு உறழ்ந்து
வரும்.
 

எ. டு:  பாழ்க்கிணறு  -  பாழ்ங்கிணறு,   சேரி,  தோட்டம்,  படப்பை
எனவரும்.    பாழ்ங்கிணறு    என்பதைப்  பாழினுட் கிணறு  என ஏழாம்
வேற்றுமைப் பொருள்பட   விரிப்பார்  நச்சினார்க்கினியர். அஃதொவ்வாது
பாழினை உற்றகிணறு என இரண்டாவது விரித்தலே சால்பென்க.
 

சூ. 388 :

ஏழென் கிளவி உருபியல் நிலையும் 
(93)
 

க-து :

ஏழ் என்னும் சொல் அன்சாரியை பெறுமென்கின்றது.
 

பொருள்:  ஏழ்   என்னும்   எண்ணுப்பெயர்   பொருட்பெயர்களொடு
புணருங்கால் உருபுபுணர்ச்சிக்கு ஓதியாங்கு அன்சாரியை பெற்று நிற்கும்.
 

எ. டு:   ஏழன்காயம்,  சுக்கு,  தோரை,  பயறு   எனவரும்.  ஏழனாற்
கொண்ட (ஏழுகாசுகளாற் கொண்ட) காயம் எனவிரியும்.
 

சூ. 389 :

அளவும் நிறையும் எண்ணும் வருவழி 

நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் 

கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க  

(94)
 

க-து : 

ஏழ் என்னும்  சொல் பிற அளவைப் பெயர்களொடு புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:   மேற்கூறிய  ஏழ்  என்னும்  சொல்முன் அளவுப் பெயரும்
நிறைப்  பெயரும்  எண்ணுப் பெயரும் வரும்வழி நெட்டெழுத்தாகிய முதல்
குறுகலும்  ழகரத்தின்  மேல் ஓர்   உகரம்   வருதலும்    ஆசிரியர்க்குத்
தவிர்க்கும் நிலையின்று. எனவே, முதல் குறுகும்; உகரம் பெறும் என்றவாறு.
 

எ. டு:  எழுகலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும்
எழுகழஞ்சு,   தொடி,  பலம்  எனவும்  எழுமூன்று,  எழுநான்கு, எழுநூறு
எனவும் வரும்.