நூன்மரபு305

சூ. 394 :

உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது 
(99)
 

க-து :

ஏழ்  என்பது  உயிரொடு  புணரின்  திரியாது இயல்பாக வரும்
என்கின்றது.
 

பொருள்:  ஏழ்    என்னும்    சொல்    தன்முன்னர்    மேற்கூறிய
சொற்களேயன்றி  உயிர்முதன்  மொழிவரினும்  இயல்பாகுமென மேற்கூறிய
அவ்விலக்கணத்தின் மாறுபடாது.
 

எ. டு: ஏழுழக்கு,   ஏழகல்,   ஏழிலை,  ஏழுரி,  ஏழிரண்டு, ஏழைந்து
எனவரும். இங்ஙனம் எல்லாப்பெயரொடும்  ஒட்டிக்  கொள்க.   ஏழிருபது,
ஏழெழுபது என அடையொடுவரினும் ஒக்கும்.
 

சூ. 395 :

கீழ்என் கிளவி உறழத் தோன்றும்  
(100)
 

க-து :

கீழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள்:  கீழ்  என்னும்  பண்புப் பெயர்ச்சொல் வல்லெழுத்து வரின்
இயல்பாயும், மிக்கும், உறழ்ந்தும்வரும்.
 

எ. டு:  கீழ்குலம் - கீழ்க்குலம், சாதி, தொழில், பண்பு எனவரும்.
 

பொதுப்படக் கூறினமையின் கீழ் என்பது  இடமுணர்த்தி  வருங்காலும்
இவ்விதிகொள்க.   எ. டு:  கீழ்குன்றம்,  சுனை,  தெற்றி,  பாறை  எனவும்
கீழ்க்குன்றம்,   சுனை,  தெற்றி,  பாறை  எனவும்  வரும்.  இடமேயன்றித்
திசையுணர்த்தி வருங்காலும் இவ்விதி ஒக்கும்.
 

எ.டு:  கீழ்குளம் -  கீழ்க்குளம்,   சேரி,  தோட்டம்,  பாடி எனவரும்.
உறழத்     தோன்றுதல்   பண்பிற்கும்,    மிகுதல்    ஏனையவற்றிற்கும்
வலியுடைத்தென்க.
 

சூ. 396 :

ளகார இறுதி ணகார இயற்றே 
(101)
 

க-து :

ளகர ஈறு வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:   ளகர ஈற்றுப்  பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்
ணகர ஈற்றிற்கு ஓதிய இயல்பிற்றாய் டகரமாகத் திரிந்து புணரும்.
 

எ.டு:  முட்குறை,  சிறை,  தலை, புறம்  எனவரும். உதட்கோடு, செவி,
தலை, புறம் எனப் பிறவற்றொடும் ஒட்டிக்கொள்க. (உதள்-ஆடு)
 

சூ. 397 :

மெல்லெழுத் தியையின் ணகார மாகும்
(102)
 

க-து :

ளகர ஈறு மென்கணம் வரின் திரியுமாறு கூறுகின்றது.