பொருள்: ளகர ஈற்றுப் பெயர் மெல்லெழுத்துவரின் ணகரமாகத் திரியும். |
எ. டு: முண்ஞெரி, முண்ணுனி, முண்மரம் எனவரும். ளகரப்புள்ளிமுன் கசபவய என்பவையன்றிப் பிறமெய்கள் மயங்காமையின் அல்வழியினும் மெல்லெழுத்துவரின் இத்திரிபு எய்துமெனக் கொள்க. |
எ. டு:முண்ஞான்றது, முண்ணீண்டது, முண்மாண்டது எனவரும். இஃது உய்த்துக்கொண்டுணர்தல் என்னும் உத்தி. |
சூ. 398 : | அல்வழி யெல்லாம் உறழென மொழிப |
(103) |
க-து : | ளகர ஈற்று அல்வழிப்புணர்ச்சியாமாறு கூறுகின்றது. |
பொருள்: ளகரஈறு எல்லாம் அல்வழிக்கண் இயல்பும் திரிபுமாக உறழ்ந்து வருமென்று கூறுவர் ஆசிரியர். |
எ. டு: முள்கடிது - முட்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். புள், பொருள் முதலாயவற்றொடும் கூட்டிக் கண்டு கொள்க. |
சூ. 399 : | ஆய்தம் நிலையலும் வரைநிலை யின்றே |
| தகரம் வரூஉம் காலை யான |
(104) |
க-து : | ளகர ஈறு தகரம் வரும்வழி எய்தும் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : குற்றெழுத்தைச் சார்ந்து ஈரெழுத்தொரு மொழியாக நிற்கும் ளகர ஈறு தகரம் வருமிடத்து ஆய்தப் புள்ளியாகத் திரிந்து நிற்றலும் நீக்கும் நிலையின்று. குற்றெழுத்தைச் சார்ந்த ஈரெழுத்தொருமொழி என்பது ஏற்புழிக் கோடல் என்னும் உத்தி. |
எ. டு: முள் + தீது = முஃடீது எனவரும். முஃடீமை என வேற்றுமைக் கண்ணும் வரும். உம்மையால் முட்டீது-முட்டீமை எனவும் வரும். |
சூ. 400: | நெடியதன் இறுதி இயல்பா குநவும் |
| வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் |
| போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே |
(105) |
க-து : | ஒருசார் ளகர ஈற்றுச் சொற்களுக்குப் புறனடை வகையான் விதி கூறுகின்றது. |