நூன்மரபு308

தொழிற்பெயர் என்பார் ஒருசாரார். வாள் என்பதனடியாக வினைமுற்றும்
இருவகை எச்சமும் பிறவாமையான் உரிச்சொல் எனக்கோடலே சாலுமென்க.
 

இனி,   வாளாதி   -   வாளாதே   என    வினையாக    வருதலின் தொழிற்பெயராகக்    கொள்ளலாமெனின்?   அஃது   இன்னா,  பொல்லா என்பவை போலப் பண்புரிச்  சொல்லடியாகப் பிறந்த எதிர்மறைக் குறிப்புச்
சொல்லாவதன்றி முதனிலைத் தொழிற் பெயராகாதென்க.
 

இச்சொல்   செயலறவைக்குறித்து  வாளாவிருந்தான்,  வாளாகிடந்தான்,
வாய்வாளாதி,  வாய்வாளாதே   என  எதிர்மறையே  குறித்து வருதலன்றி
யாண்டும் விதி வினையாக  வாராமையறிக. வாள் என்பது ‘சொல்’ என்னும்
பொருள்பட நிற்கும் உரிச்சொல் என்றலே நேரிது.
 

சூ. 402 :

இருளென் கிளவி வெயிலியல் நிலையும் 
(107)
 

க-து :

இருள் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள்:  இருள் என்னும் சொல்  வெயில் என்னும்  சொற்கு  ஓதிய
இயல்பிற்றாய் அத்தும், இன்னும் ஆகிய சாரியைகள் பெற்றுப் புணரும்.
 

எ. டு:  இருளத்துக் கொண்டான்;  இருளிற்  கொண்டான்,  சென்றான,
தந்தான்,   போயினான்   எனவரும். ஞான்றான்,  நீண்டான்,  மாண்டான்,
வந்தான் என ஏனைக் கணத்தும் வரும்.
 

சூ. 403 :

புள்ளும் வள்ளும் தொழிற்பெய ரியல 
(108)
 

க-து :

புள், வள் என்னும் பெயர்கள் உகரம் பெறுமென்கின்றது.
 

பொருள்:   புள், வள்  என்னும்  சொற்கள்  தொழிற் பெயர்க்கு ஓதிய
இயல்பினவாய்  உகரம் பெற்று வல்லெழுத்துவரின்   மிக்கும்   ஞநமவரின்
இயல்பாயும் புணரும்.
 

எ. டு:  புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது,  சிறிது,  தீது, பெரிது  எனவரும்.
ஞான்றது,   நீண்டது,  மாண்டது  எனவும்  வரும்.  வேற்றுமைக்கண்ணும்
இவ்வாறே கடுமை, சிறுமை, தீமை, வலிமை என்பவற்றைக்  கூட்டிக் கண்டு
கொள்க.
 

பள்ளுக்கடிது-கடுமை எனச்சிறுபான்மை ஏனையவும் உகரம் பெறுதலைப்
புறனடையாற் கொள்க.