நூன்மரபு309
சூ. 404 :

மக்கள் என்னும் பெயர்நிலைக் கிளவி 

தக்கவழி யறிந்து வலித்தலும் உரித்தே 

(109)
 

க-து : 

மக்கள்   என்னும்   பெயர்க்கு  உயிரீறாகிய   உயர்திணைப்
பெயரும்  (தொகை-11)   என்னும்    சூத்திரத்தான்  எய்தும்
விதியை ஒரு மருங்கு விலக்குகின்றது.
 

பொருள்: மக்கள்   என்னும்   பெயர்ச்சொல்லின்    இறுதி   ளகரம்
திரிதற்குத் தக்க   இடமறிந்து   வல்லொற்றாகத்   திரிதலும்  உரித்தாகும்.
உம்மையான் தக்கவழியறியாவிடத்து இயல்பாக வரும் என்பதாம்.
 

எ. டு:  மக்கட்குணம்,    மக்கட்டிறம், மக்கட்பண்பு  எனவரும். இவை
வேற்றுமை.   மக்கட்பேறு, மக்கட்செல்வம், மக்கட்சுட்டு  எனவும்   வரும்.
இவை இருபெயரொட்டுப்  பண்புத்தொகை. மக்கள் கருதுவர்-மக்கள் சூழ்வர்
எனவரும் இவை இயல்பு. வேற்றுமைத் தொகைக்கண் பயின்று வருமென்பது
தோன்ற ‘‘தக்கவழியறிந்து’’ என்றார்.
 

மக்கள்   என்னும்   பெயர்   அஃறிணைக்குரிய  கள்  விகுதி பெற்று
உயர்திணைப் பெயராய்  நிற்பதொன்றாகலின்  மக்கட்  பண்பினைச்  சுட்டி
வருங்கால் திரிந்தும்  பிறவாறு வருங்கால் இயல்பாயும் நிகழுமெனக்கோடல்
ஓராற்றான்   அமைவதன்றி,   மக்கள்   உயிர்நீங்கிக்  கிடக்கும் நிலையில்
இச்சொல் திரிபுறும் என உரையாசிரியர் கூறுவது பொருந்துமாறில்லை.
 

சூ. 405: 

உணரக் கூறிய புணரியல் மருங்கின் 

கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே 

(110)
 

க-து :

புள்ளிமயங்கியலுக் காவதொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள்:  புள்ளியீறுகள் நின்று நாற்கணத்தொடும் மயங்கிப்  புணரும்
முறைமைப்பற்றித்  தெளிவாகக்கூறிய  புணர்ச்சி  விதிகளின்  பக்கத்தானே,
கூறாதனவற்றிற்குச்  செய்கையறிந்து   புணர்த்தற்  குரியவற்றை ஆராய்ந்து
சான்றோர்   வழக்கினையும்   செய்யுளினையும் நோக்கிக்கருதி  அவற்றை
விதியாகக்கொள்க.
 

காணுதல்  = ஆராய்தல். ‘கண்ணினர்’  என்பது  முற்றெச்சம். ‘கொளல்’
என்பது அல்லீற்று  வியங்கோள்.  ஏகாரம்   இசைநிறை.   ‘உணரக்கூறிய’
என்றது   இவை  இவ்வேதுவான் இவ்வாறாகப்   புணரும் என   உணரும் வண்ணம்  கூறிய  இலக்கணமுறைமையை.  நூற்பாக்களை  யன்று. எனவே,
அம்முறைமையாற் பிறவற்றையும் அறிந்தமைத்துக் கொள்க என்றவாறாம்.