பொருள்: குற்றியலுகரம் வருமிடம், நெடில் முதலாகிய ஈரெழுத் தொருமொழி, உயிர்த்தொடர்மொழி, இடையொற்றுத் தொடர்மொழி, ஆய்தத் தொடர்மொழி, வல்லொற்றுத் தொடர்மொழி, மெல்லொற்றுத் தொடர்மொழி ஆகிய ஆறேயாம். | ‘‘நெட்டெழுத்திம்பர்’’ என மொழிமரபிற் கூறினமையின் ஈண்டு வாளா ஈரெழுத்தொருமொழி என்றார். உயிர்த்தொடர்மொழி என்றது உயிர்மெய்யெழுத்தாய்க் குறிலாயும் நெடிலாயும் தொடர்ந்த எழுத்துக்களை. ‘‘உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே’’ என்றதனான் அவற்றை உயிர்த்தொடர்மொழி என்றார். குற்றியலுகரம் அதிகாரமாதலின் வாளா உகரம் என்றார். ஏகாரம் தேற்றம். | குற்றியலுகரம் என்னும் பெயர்மாத்திரையானே அதற்குரிய இயல்பு பெறப்படும். ஆதலின், குறுகும் என்றது வரும் என்னும் பொருட்டாய் நின்றது. அன்றேல், முற்றுகரமே இவற்றின் சார்பால் குறுகி நிற்கும் எனப் பொருள் கொள்ளின் குற்றியலுகரம் என்பது முதலெழுத்தின் விகாரமே எனப்பட்டு மாறுகொளக் கூறலாய் முடியும் என்க. | எ. டு: ஆறு, பாகு, உல்கு, குருகு, பலாசு, எஃகு, மூக்கு, கரும்பு எனவரும். இவற்றை இதழ்குவியாது கூறியும் இனிது, இனிமை என்னும் உயிர் முதன்மொழிகளைப் புணர்த்தும் கண்டுகொள்க,. | இவற்றைத் தனிமொழியாக வைத்து இதழ் குவியாமல் ஒருமாத்திரை யளவிற்கூறினும், உயிரல்லாத ஏனைக்கணங்களொடு புணர்த்துக் கூறினும் அதனியல்பு தெற்றெனப் புலப்படாதென்க. | சூ. 407 : | அவற்றுள், | | ஈரொற்றுத் தொடர்மொழி இடைத்தொட ராகா | (2) | க-து : | தொடர்மொழி ஐந்தனுள் வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் யரழக்களை அடுத்து வருங்கால் எய்தும் ஐயம் நீக்குகின்றது. | பொருள்: மேற்கூறியவற்றுள் இடையெழுத்துக்கள் வல்லெழுத்தையும் மெல்லெழுத்தையும் தொடர்ந்து ஈரொற்றாய் நிற்கும் தொடர்மொழி இடைத்தொடராகா. வன்றொடராகவோ, மென்றொடராகவோ ஆகும். | எ. டு: வாய்ப்பு, ஈர்க்கு, காழ்ப்பு - இவை வன்றொடர். |
|
|