குறித்த பொருள்மொழி நிலையும் வேற்றுமை யல்வழிப் பொருள்மொழி நிலையும்’’ என்றதனான் பெறப்படுமெனின்? பெறப்படாது. என்னை? ஆசிரியர், நிறுத்த சொல்லையும் குறித்து வருகிளவியையும் ஈறுபற்றி ஓதுங்கால் “உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்’’ ‘‘மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்’’ எனத் தனித்துவரல் மரபினையுடைய உயிரையும் மெய்யையுமே சுட்டிக் கூறினாராகலின் சார்ந்து வரல் மரபினதாகிய குற்றியலுகரம் ஆண்டு அடங்கிற்றில்லை என்க. |
மற்று ‘‘மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்’’ என்பதனொடு “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” என மாட்டெறிந்து கூறியதனான் இதனை மெய்யுள் அடக்கினார் எனக் கொள்ளலாமெனின்? ஆகாது. என்னை? ஆண்டு ஈற்றில் நிற்கும்மெய் வருமொழி உயிரேறிமுடியும் என்றும், அவ்வாறே குற்றியலுகரமும் உயிரேற இடங்கொடுக்கும் என்றும் அவ்இலக்கணம்பெற மாட்டெறிந்ததன்றிக் குற்றியலுகரம் மெய்யெழுத் தியல்பிற்று எனக்கூறாமையின் அடங்காதாயிற்று. எனவே, ற்றியலுகரஈற்றுச் சிறப்புப்புணர்ச்சி கூறும் இவ்வியலின்கண் அஃது இருவழியானும் புணரும் என்பதை விதித்தல் கடப்பாடாயிற்றென்க. |
இனி இச்சூத்திரத்து, ‘‘நிலையும்’’ என்னும் பாடத்தை ‘‘நிறையும்’’ எனக்கொண்டு கூறுவார் உரையும் விளக்கமும் இந்நூல் நெறிக்கேலாமையைக், குற்றியலுகரம் பற்றிய எனது ஆய்வுக் கட்டுரையுள் கண்டுதெளிக. |
சூ. 409: | வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் |
| தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே |
(4) |
க-து : | ‘‘இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே’’ என மொழிமரபிற் கூறிய வண்ணம் குற்றியலுகரம் தனக்குரிய அரைமாத்திரையினும் குறுகி ஒலிக்கும் இடம் கூறுகின்றது. |
பொருள்: வல்லொற்றுத் தொடர்ந்த குற்றியலுகரம் வருமொழி வல்லெழுத்து வந்து புணருமிடத்து ‘‘அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே’’ என்ற இலக்கணத்ததாய் நிலைபெறுதலும் உரித்தாகும். உம்மை எதிர்மறை. அதனான் தனக்குரிய அரைமாத்திரையளவினும் குறுகி நிற்றலும் உரித்தாம் என்றவாறு. |
வரும் வல்லெழுத்து நிலைமொழிக்கண் உள்ள எழுத்தாகவே வரின், என்பது குறிப்பாக விளங்க ‘‘வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து’’ என்றார். பிற வல்லெழுத்து வரின் கூறுவோனது முயற்சிக்கேற்பக் குறுகியும், குறுகாதும் வரும் என்க. |