பொருள்: வன்றொடர்க் குற்றுகர மொழியும் மென்றொடர்க் குற்றுகர மொழியும் நிற்ப, வருமொழி வல்லெழுத்தினது ஒற்று அவ்விடையே மிகும்; மெல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரத்தின் மெல்லொற்றுக்களெல்லாம் கிளையொற்றாகிய வல்லெழுத்தாகி முடியும். | இச்சூத்திரத்துள், முன்இரண்டடிகள் ஒரு சூத்திரமாகவும் பின் இரண்டடிகள் ஒரு சூத்திரமாகவும் இருத்தல் வேண்டும். உரையாசிரியன்மாரால் வழக்குநோக்கி ஒன்றாக வைத்து உரை கூறப்பட்டதென்க. | பிறப்பு முறையான் ஒத்து வளிவகையான் வேறுபடுதலின் வல்லினமும் மெல்லினமும் ஒன்று ஒன்றற்குக் கிளையாயின. | எ. டு: (1) கொக்குக்கால், செவி, தலை, புறம் எனவும் குரங்குக்கால், செவி, தலை, புறம் எனவும் வரும். இவை வல்லெழுத்துமிக்கன. ஏனைக் கணங்கள்வரின் இயல்பாதல் தொகைமரபின்கண் கூறப்பட்டது. (2) எண்கு + குட்டி = எட்குக்குட்டி, செவி, தலை, புறம் எனவும் குரங்கு + கால் = குரக்குக்கால், செவி, தலை, புறம் எனவும் வரும். என்பு+காடு-எற்புக்காடு; கரும்பு + கட்டி- கருப்புக்கட்டி என இவ்வாறு வருவனவெல்லாம் கொள்க. இவை மெல்லொற்றுக்கள் கிளையொற்றுக்களாகத் திரிந்து வருமொழி வல்லெழுத்து மிக்கன. | கிளையொற்றாதற்கு வருமொழி வரைந்து கூறாமையான் ஏனைக்கணத்தும் ஏற்பன கொள்க. எ.டு: குரக்குஞாற்சி, நிலை, மாட்சி, விரல், உகிர் எனவும்; எற்புடம்பு, சிலப்பதிகாரம், கற்றா எனவும் வரும். | “எல்லாம்” என்றதனான் பந்துத்திரட்சி, எறும்புப்புற்று மஞ்சுப்புரப்பு எனக் கிளையொற்றாகத் திரியாமல் வருதலும், “வல்லொற்றிறுதி” என்றதனான், அற்புத்தளை, சுருப்புநாண் எனத் திரிந்து அல்வழிக்கண் இருபெயரொட்டாக வருதலும் கொள்க. | சூ. 415 : | மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை | (10) | க-து : | குற்றுகர ஈற்று மரப்பெயர்கட்கு அம்முச் சாரியை வரும் என்கின்றது. | பொருள் : குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ச்சொற்களுக்கு அம்முச் சாரியை வரும். ஏகாரம் இசைநிறை. |
|
|