தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் |
முன்னுரை |
‘‘வைய மீன்றதொன் மக்களு ளத்தினைக் |
கையி னாலுரை கால மிரிந்திடப் |
பைய நாவை அசைத்த பழந்தமிழ் ஐயை’’ முதற்கண் பேச்சு |
வழக்காக எழுந்தகாலை, எவ்வெவ்வாறெல்லாம் உருப்பெற்றுக் கிளைத்து வளர்ந்து மக்கள் உளக்கருத்தினைப் புலப்படுத்தினாள் என்பது கடை போகாத ஆய்வெனினும் அவ்வாய்வு சுவையுடையதொரு முயற்சியேயாம். |
தமிழ்க்கன்னி, பேச்சுவழக்காகிய நடைபயின்று, எழுத்து வடிவாகிய கலைபூண்டு, புலவோர் நெஞ்சங்களில் அரங்கேறிய காலத்துச், சொற்களின் வரிவடிவம் பொருட்குறியீடாக அமைந்ததா, ஒலிக்குறியீடாக நிறைந்ததா என்னும் ஆய்வும் அத்தகையதே எனினும், எழுத்துவடிவம் பெற்ற ஏனைய உலக மொழிகளொடு அவற்றை ஒப்பிட்டு ஆராய்வதற்குப் பெரிதும் வாய்ப்புண்மையான், அவ் ஆய்வு சிலபல உண்மைகளைத் தேறத் துணைபுரியும். |
மேலும், பொருளையும் பொருளின் பண்பு செயல் முதலிய வற்றையும் குறிப்பதற்குத், திறன்பெற்று வளர்ந்து வரிவடிவுற்றுத் தொடராக்கம்பெற்ற நிலைகளை ஆராய்வதும் அவ்வாறேயாம். அங்ஙனம் எழுதப்பெற்ற சொல் சொற்றொடர்களை எழுதிய, எழுதப்பெற்ற, கருவிகளொடு பேணிக்காத்து எதிர்கால மக்களுக்குப் பயன்படச் செய்த சான்றோர்கள் வணக்கத்திற்குரியவர்கள் என்பதில் ஐயமில்லை. |
அங்ஙனம் ஒருமொழி, பேச்சுவழக்காக உருப்பெற்று, எழுத்து வடிவமுற்றுத் தொடர்நிலைஎய்தி நூல்வடிவாக எழுதிப் பாதுகாக்கும் நிலையினை எய்தப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும் என்பதில் கருத்துமாறுபாடு பெரிதும் உண்டாதற்கில்லை. வளர்ந்து முற்றிய ஒருமொழியினின்று பிறிதொரு மொழி கிளைக்குமாயின், அது சில நூற்றாண்டுகளில் உருப்பெற்றுச் செம்மையுற இயலும் என்பது அறிவியலுக்கு ஒத்ததேயாம். |
ஒருமொழி தொடராக்கம் பெற்று வளர்ந்து, எதிர்காலத்தார் நினைதற்கும் நினைவுறுத்தற்கும் ஏற்பத், தொடர்களையும் சொற்களையும் செம்மைசெய்து அழகும் சுவையும் பட |