அமைத்துக்கொள்ளும் பாட்டு அல்லது செய்யுள்வடிவம் எய்த, மேலும் பல நூற்றாண்டுகள் ஆகும். அங்ஙனம் வளர்ந்து இலக்கியச்செம்மையுற்ற நிலையிற்றான், இலக்கணம்பற்றிய சிந்தனை தோன்றும்; மொழிபற்றிய அமைப்பாய்வும் ஒழுங்குபடுத்தும் உணர்வும் தோன்றும். எனவே, இலக்கணத்தோற்றம் மிகப்பிற்பட்ட நிலையில்தான் நிகழும் என்பதில் ஐயமில்லை. | இலக்கணநோக்கில் மொழியை ஆராயுங்கால், முதற்கண் சொற்றொடர் அமைப்பையும், பின்னர்ச் சொற்களின் அமைப்பையும் நிலைகளையும், அதன்பின்னர்ச் சொல்லுறுப்பாகிய எழுத்துக்களையும் ஆராயநேரும். அவ் ஆராய்ச்சியில் ஓரளவு தெளிவும் செம்மையும் உற்ற பின்னர்த்தான், எழுத்துக்களின் ஒலிநிலைகள் ஆராய்ந்து காணப்படும். | மேற்கூறிய ஆய்வுகள் ஓரிருவராலோ ஒருகால எல்லைக்குள்ளோ நடைபெறுதல் இயலாது. இலக்கணம் பல்லாண்டுக் காலம் பலரான் ஆராயப்பெற்று, அம்மொழி வழங்குவோர் ஏற்றுப் பயிலும் நிலையில்தான், வரையறைபெறும். அவ்வரையறைகள் செம்மையுற்ற பின்னரே சூத்திரயாப்புமுறையில் இலக்கண நூல்கள் உருப்பெற இயலுமென்பதில் கருத்துவேறுபாட்டிற்கிடமில்லை. | இலக்கணநூல்கள் உருப்பெற்று, அவற்றை அம்மொழியை வழங்கும் சான்றோர்கள் ஏற்று, அவற்றின்வழியே இலக்கியங்களை ஆக்க, அவற்றை மக்கள் பயிலத் தொடங்கிய பின்னர்த்தான், அம்மொழி பெரிதும் சிதைவுறாமல் வளரும், செழிப்புறும். | இலக்கண நூல்களை உருவாக்கும் அறிவும் ஆற்றலும் வாய்க்கப்பெற்ற மெய்யறிவாளர்கள், எழுத்தொலி முதலாகச் செய்யுட் டொடர்நிலையீறாக நோக்கி, இலக்கணமரபுகளையும் கோட்பாடுகளையும் வரைந்து கூறுங்கால், சிலவற்றான் பலவற்றை உணரும் வண்ணம் அமைத்துக் கூறுவர். அங்ஙனம் நூல்செய்யுங்கால், சிலவற்றை நீக்கியும் இன்றியமையாச் சிலவற்றை ஆக்கியும், பேச்சுவழக்கினான் மொழி சிதைவுறாத வண்ணம் மிக நுட்பமாகச் செய்வர். | உலகிடை வழங்கும் தொன்மையும் செம்மையும் சான்ற மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. எனினும், பிற மொழிகளுக்கில்லாத ஒரு சிறப்பு இதன்கண் காணப்படுகின்றது. அஃதாவது பிறமொழிகளுக்கு அதன் தன்மைகளை விளக்கும் அடைமொழிகள் பெரும்பாலும் இல்லை. தமிழ் மொழிக்குச் ‘செம்மை’ முதலாய பல |
|
|