மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி: என்றது ஆரியமொழியுள் காணப்பெறும், உயிர்மெய்யை உயிராகக் கோடல், ஏ, ஐ, ஓ, ஒள இவற்றைச் சந்தியக்கரமாகவும் தீர்க்கசுரமாகவும் கோடல், சார்பொலியாக நிற்கும் அநுஸ்வாரத்தையும் (அம்) விசர்க்கத்தையும் (அஹ்) உயிரெழுத்தாக எண்ணிக் கோடல், சார்புப் போலியாகிய ஊஷ்மாணங்களை வியஞ்சனங்களாகக் கோடல், அளபெடையை எழுத்தாக எண்ணிக் கோடல் ஆகிய மயக்கங்களைப் போலன்றி, மயங்காமல் மரபொடு கூடிய, உயிரும் மெய்யும் சார்புமாகிய எழுத்துக்களையும் அவற்றின் இயல்புகளையும் சுட்டி, உயிர்ப்பொலியின் ஏழு இசைகளையும் நெடிலாகக் கொண்ட தமிழ் மரபின் நுண்மையைப் பிழைபடாமல் நூன்மரபிற் சுட்டி ஐகாரமும் ஒளகாரமும் மொழியினுள் அஇ, அய், அஉ எனச் செய்யுட்கண் போலியாக அமையும் நிலையினை மொழிமரபிற் சுட்டி, வேறுவேறு இயலவாய் வரும் பிறப்பிலக்கணத்தையும்-தனித்துவரல் மரபினவாகிய உயிர், மெய்களின் பிறப்பிடத்தைச் சார்ந்தே சார்பெழுத்துக்கள் பிறந்து வருதலையும், அவற்றின் புணர்ச்சியிலக்கணத்தையும் நிரல்பட அமைத்துப் புணருதற்கண் எழுத்தும் மாத்திரையும் பிரித்துணரப்படும் நெறியினையும் தெளிவாகக் காட்டி என்றவாறு. ‘மரபின் எழுத்து’ என்றது மூன்றன் உருபும் பயனும் உடன் தொக்க தொகை. |
இனி இத்தொடர்க்கு இளம்பூரணர், முன்னைநூல் போல எழுத்திலக்கணம் சொல்லுட் சென்று மயங்காத முறையானே எழுத்திலக்கணத்தை வேறுவேறு தெரிவித்தென்றார். இவ்வாறு மயக்கிக் கூறிய முன்னை நூல் யாதும் காணப் பெறாமையானும், காணப்பெறின் அது செந்தமிழ் இயற்கை சிவணிய தன்மையாகாமையானும், அதனைக் கற்றுத் தெளிந்தாரெனின் அது தொல்காப்பியர்க்கு இழுக்காதலானும் அவர் உரை ஊகமென்று |