விடுக்க. நச்சர் எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டி என்றார். இதனாற் போந்த சிறப்பென்னையோ? இனிச் சண்முகனார் ஒன்றனுட் பிறிதொன்று கலவாத என்றும், எழுத்தென்பதற்கு நூல் என்றும் பொருள் கூறினார். இவ்வுரையும் வெள்ளுரையே. இனி முனிவர் இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழும் முன்னூலுட்போல விரவாத தன்மையானே இயற்றமிழை வேறு பிரித்து உலகிற்கறிவித்து எனக் கூறினார். தொல்காப்பியர் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறியிருந்தாலல்லவோ ஏனைய விரவுதலைப் பற்றிய ஆராய்ச்சி? இக்குழப்பத்தான் முனிவர் எழுத்தை இயற்றமிழ் என்றும், அவையத்து அரங்கேறுதலை மறந்து உலகிற்கறிவித்து என்றும் மயங்கியுரைத்தார். இனிச் சாத்திரியார் மயக்கமில்லா மரபோடு கூடிய இலக்கணத்தைப் படித்துக் காட்டி என்றார்; எழுத்தென்பதற்கு இலக்கணமென்று பொருள் கூறினார், இது முன்னர்ப் புலமென வந்துள்ளமையின் கூறியது கூறலாய் முடியும். எனவே மயங்கா மரபின் எழுத்து என்பதில் யாவரும் மயங்கியுள்ளமை தெளிவாகும். |
மல்குநீர்வரைப்பின்: கடல்சூழ்ந்த இவ்வுலகத்தின்கண் என்றவாறு. மல்குதல்-பெருகுதல். ஈண்டுச் சூழ்தல் என்னும் பொருட்டாய் நின்றது. நீரும், வரைப்பும் ஆகுபெயர். ஏழனுருபு தொக்குத், தோற்றி என்பதனோடு முடிந்தது. நிலவுலகத்தின்கண் என முனிவரும் நில எல்லையில் என வெள்ளைவாரணனாரும் உரைத்தனர். வரைப்பிற்குரிய மல்குநீர் என்னும் அடை பழமையோனது புகழைக் குறிப்பாற் சிறப்பித்து நின்றது. (கடல் போலும் புகழ் எனல் குறிப்பு). |
ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்: ஐந்திரமென்னும் நூலறிவு நிறையுமாறு கற்றுணர்ந்த தொல்காப்பியன் என்றவாறு. ஐந்திரம் என்பதற்கு இந்திரனாற் செய்யப்பட்ட வியாகரணநூல் என்றே உரையாளர் யாவரும் உரைத்துள்ளனர். |
இனி இத்தத்திதபதம் இருவகைச் செய்யுட்கிழமையிலும் வரும். அஃதாவது, பாணினியால் செய்யப்பட்டது பாணினீயம் என்றும் வேதத்தோடு தொடர்புடையது வைதீகம் என்றும் வருதல் போல இந்திரனாற் செய்யப்பட்டது என்றானும் இந்திரனோடு தொடர்புடையது என்றானும் பொருள்தரும். உரையாளர் யாவரும் முன்னதனையே கொண்டுள்ளனர். |
நிலந்தருதிருவிற் பாண்டியன், நூலோர் அவை நிறுவி மக்கள் பயிலுவதற்கேற்ற நூல்களை அரங்கேற்றி வழங்கினன் என்பது மேற்கூறப்பட்ட முறையாற் புலனாகும். அந்நூலோர் |