முன்னுரை61

குழுமி  ஆராயுமிடம்  கூடல் (சங்கம்) எனப்பட்டது.  இதன்கண் தொகுத்து
வைக்கப்பட்ட  நூல்களுள்  பன்னாட்டுப்  பேரறிஞர்களின்  கருத்துக்களும் கலை நுணுக்கங்களும் காலந்தொறும் எழுதித்  தொகுக்கப்படும் களஞ்சியம் வேந்து  நூல்  எனப்பட்டது.  அது   பன்மொழியாளர்க்கும்   பயன்படல் வேண்டிப்   பொதுமொழியாகிய  சமற்கிருதத்தில்   அமைந்திருந்தமையின் கூடலைச் ‘சங்கம்’ என்றும், வேந்தனூலை ‘இந்திரனூல்’ என்னும் பொருளில் ஐந்திரம்  என்றும் வடமொழிப் பேரால் வழங்கலாயினர். வேந்தன் என்னும்
தமிழ்ச்   சொல்லுக்கு  நேரானது  இந்திரன்  என்னும் வடசொல். அதுவே
தத்திதமாய் ஐந்திரம் எனப்பட்டது.
  

இனி  வியாகரணமென்பது  வடமொழி  வேதாங்கம் ஆறனுள் ஒன்றாய்
வேதத்துட் பயிலும்  சொற்களின் அமைப்பும் இயல்பும் அவற்றைப் பயிலும் முறையும்பற்றிக்  கூறுவதாகும்.  எழுத்துப்  பற்றிய  இயல்புகளைச் ‘சிட்சை’
யென்னும் அங்கமும், யாப்புப் பற்றிய  விதிமுறைகளை ‘நிருத்தம்’ என்னும்
அங்கமும் பேசும்.  இடைக்காலத்துத்  தோன்றிய வியாசர், யாக்ஞவல்கியர்,
யாஸ்கர், பாரத்துவாசர்,  பாணினி,  காத்தியாயனர்  போன்ற பேரறிஞர்கள்
எழுத்து,    சொல்,   யாப்பு    ஆயவையடங்க   நூல்   செய்துள்ளனர். இம்முறையிலான   பாணினி   முனிவரின் அட்டாத்தியாயியை வியாகரணம்
என்றும் வழங்குகின்றனர். பிற்காலத்தில்  இலக்கணம்  என்னும் பொருளில் இச்சொல்  மிகுதியாக  வழங்குகிறது.  எனவே,  உரையாளர்கள்  இவற்றுள்
எக்கருத்துப்பற்றிக் கூறினர் என்பது புலப்படவில்லை.
  

இன்றைய    வடமொழியறிஞர்களும்   ஆய்வாளர்களும்     பாணினி
முதலானோருக்குமுன்   ஐந்திரமென்னும்  வியாகரண  நூல் வடமொழியில்
இருந்ததாகவும் அதுபற்றிச் சிற்சில குறிப்புக்கள்  கிடைப்பனவாகவும்  கூறிப்
பாணினிக்குப்பின்    அந்நூல்  வழக்கொழிந்திருக்க   வேண்டும்  என்றும்
கருதுகின்றனர்.
  

கற்ப  ஆரம்பத்தில்  பிரமதேவர் தேவர்களுக்குச் சொன்ன பிரமநூலை
இந்திரன் நூறாயிரம் கிரந்தங்களாற் சுருக்கிக் கூறினான். இவ் ஐந்திரநூலைப் பாணினி  எண்ணாயிரங்  கிரந்தங்களில்   அடக்கினான்  என  ஹொய்-லி (Hoei-Li)  என்னும்  சீன   அறிஞர்   கூறியுள்ளார்.   இனித்,  தைத்திரீய ஆரண்யகத்தில் காணப்படும் ஒலிநூற்  குறிப்புக்கள்  சிலவும், சாந்தோக்கிய
உபநிடதத்தில்   வரும்  குறியீடுகள்  சிலவும்,   ஐதரேயப்  பிராமணத்தில் உள்ளன சிலவும், ஐந்திர வழக்குகளே எனவும்,