3.வேற்றுமை மயங்கியல்

113 அவைதாம்
வழங்கியன் மருங்கின் குன்றுவ குன்றும்.

மேற்கூறப்பட்ட தொழின் முதனிலை தாம் எல்லாத் தொழிற்கும் எட்டும் வருமென்னும் யாப்புறவில்லை; வழக்கின்கட்சில தொழிற்கட் குன்றத்தகுவன குன்றிவரும்; எ - று .

குன்றத் தகுவனவாவன செயப்படுபொருளும் ஏற்பதும் பயனுமாம்.

கொடியாடிற்று, வளிவழங்கிற்று என்புழி, செயல்படு பொருளும் ஏற்பதும் பயனுமாகிய முதனிலையாயினும், ஒழிந்தனவற்றான் ஆடுதலும் வழங்கலுமாகிய தொழி னிகழ்ந்தவாறு கண்டுகொள்க.

இதனாற் பயன், எல்லாத்தொழிற்கும் முதனிலையெட்டுங்குன்றாது வருமோ சிலதொழிற்குச் சில குன்றி வருமோ வென்னும் ஐயம் நீங்குதலும், செயப்படுபொருள் குன்றிய வினையை யுணர்த்துஞ் சொல் இரண்டாவதனோ டியையா தென்பது பெறுதலுமாம்.

(30)