மேற்கூறப்பட்ட ஆகுபெயர்தாம் தத்தம் பொருளின் நீங்காது தம்பொருளின் வேறல்லாத பொருளொடு புணர்தலும், தம் பொருட்கியைபில்லாத பிறிது பொருளைச்சுட்டி நிற்றலுமென இரண்டியல்புடைய வேறுபாடு போற்றியுணரப்படும்; எ-று. கடுவென்னு முதற்பெயர் முதலோடொற்றுமையுடைய சினைமேல் நிற்றல் தத்தம் பொருள் வயிற்றம்மொடு சிவணலாம். குழிப்பாடியென்னு மிடப்பெயர் இடத்தின் வேறாய ஆடைமேனிற்றல் ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலாம். அஃதேல், குழிப்பாடியும் ஆடையும் இடமும் இடத்துநிகழ் பொருளுமாகிய இயைபுடைய வாகலினன்றே அதன் பெயர் அதற்காயிற்று; அதனான் அஃதொப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலாமாறென்னையெனின்:- நன்று சொன்னாய்; அவ் வியைபுடையவேனும், முதலுஞ்சினையும் பண்பும் பண்புடையதுமாதன் முதலாகிய ஒற்றுமையாகிய இயைபினவாகலின், அவை தம்முள் வேறெனவே படும்; அதனாற் குழிப்பாடியென்பது ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலேயா மென்பது. ஒற்றுமையாகிய இயைபுள்வழி அது தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணிற்றென்றும், அவ்வியைபின்றி இடமும் இடத்துநிகழ் பொருளுமாதன் முதலாகிய இயைபேயாய வழி இஃதொப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டிற்றென்றும், வேறுபடுத்துணரப்படுமென்பார், `வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டு' மென்றார் என்பது. அஃதேல், இதனைப் பிரித்து ஒரு சூத்திரமாக உரைத்தாரால் உரையாசிரியரெனின்:- அங்ஙனம் பிரிப்பின், தம்மொடு சிவணலும் பிறிது பொருள் சுட்டலுமாகிய இவற்றது வேறுபாட்டின்கணென்பது இனிது பெறப்படாமையானும், எழுத்தோத்தினுள் `புள்ளி யிறுதியு முயீரிறு கிளவியும்' (எழு-156) என்னுஞ் சூத்திரத்து இந்நிகர்ப் பாதுகாவலைப் பிரியாது ஒன்றாகவே யுரைத்தலானும், அவர்க்கது கருத்தன் றென்க. (32)
1.முதல் நான்கடியும் ஒரு சூத்திரமாகவும் பின் ஒரு அடியாகிய "வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்" என்பதை மற்றொரு சூத்திரமாகவுங் கொண்டு பொருள் கூறுவர் இளம்பூரணர்.
|