4.விளிமரபு

[சொற்கள் விளியேற்கும் இயல்புணர்த்துவது.]

1.விளியின் இயல்பு

118விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப.

நிறுத்த முறையானே விளிவேற்றுமை யுணர்த்திய வெடுத்துக் கொண்டார்; அதனான் இவ்வோத்து விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று.

விளியென்று சொல்லப்படுவன தம்மையேற்கும் பெயரோடு விளங்கத் தோன்று மியல்பையுடையவென்று சொல்லுவர் ஆசிரியர்; எ-று.

விளிவேற்றுமை எதிர்முகமாக்குதற் பொருட்டாதல் பெயரானே விளங்குதலிற் கூறாராயினார்.

ஈறுதிரிதலும், ஈற்றயனீடலும், பிறிது வந்தடைதலும், இயல்பாதலு மென்னும் வேறுபாடுடைமையான் `விளியெனப்படுப' என்றார்.

கொள்ளும் பெயரோ டெனவே, கொள்ளாப் பெயருமுள வென்பதாம்.

இயல்புவிளிக்கண் திரியாது நின்ற பெயரீறே விளியெனப் படுதலின், ஆண்டுந் தெற்றென விளங்கு மென்பார் `தெளியத் தோன்றும்' என்றார்.

(1)