4.விளிமரபு

[சொற்கள் விளியேற்கும் இயல்புணர்த்துவது.]

1.விளியின் இயல்பு

119அவ்வே
இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப.

விளிகொள்ளும் பெயரும் கொள்ளாப் பெயரும் இவையென மாணாக்கனுணர்தற் பொருட்டு அவையிவ்வோத்தினகத்துப் பொருள்படக் கிளக்கப்படும்; எ-று.

இது கூறுவாமென்னுந் தந்திரவுத்தி.

அவ்வேயெனக் `கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும்' (சொல் -118) எனப் பெயரா னுணர்த்தப்படுவதாய் நின்ற விளியைச் சுட்டிய, பெயரைச் சுட்டுதல் இடருடைத்தெனின் :- விளிவேற்றுமையாவது கொள்ளும் பெயரின் வேறன்றி அவை தாமேயாய் நிற்றலின், அப்பெயரைச் சுட்டவே விளியுஞ் சுட்டப் பட்டனவேயாம்; அதனான் இடரின் றென்பது. இவ்வாறுரையாது அவ்வேயெனச் சுட்டப்பட்டன விளி, வேற்றுமை யெனின்:- வருஞ் சூத்திரத்தின் அவைதாமெனப் பட்டனவும் விளி வேற்றுமையேயாய் `மெய்ப்பொருள் சுட்டிய விளி கொள் பெயர்' (சொல் -120) என்பதனோடு இயையாவாமென்பது. விளி கொள்ளும் பெயரும், கொள்ளாப் பெயரும், உயர்திணை விரவுப் பெயர் ஈண்டுயர்திணைப் பெயருள்ளுமடங்குதலும், நுண்ணுணர்வினார்க்கல்லது அறியலாகாமையின், ஏனோரும் அறிதற்கு அவை கிளக்கப்படுமென்பார் `இவ்வென வறிதற்கு' என்றார்.

(2)