கிளக்கப்படுவனவாகிய பெயர் தாம் இ உ ஐ ஓ என்னுமிறுதியையுடைய அக் கூற்று நான்கு பெயரும் உயர் திணைப் பெயருள் விளி கொள்ளும் பெயர்; எ-று அஃறிணைப்பெயர் ஆகுபெயராய் உயர்திணைக்கண் வந்துழியும், விரவுப்பெயர் உயர்திணைக் கண்வருங்காலும், அவை விளியேற்குமிடத்து உயர்திணைப் பெயராமென்றற்கு `உயர்திணை மருங்கின் மெய்ப் பொருள் சுட்டிய, வென்றார். எ - டு:`சுடர்த்தொடீ கேளாய்' (கலி. 51) எனவும்; சாத்தீ எனவும் அவை உயர்திணைப் பெயராய் விளியேற்றவாறு கண்டுகொள்க. மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயர் அப்பால் நான்கென்பன எழுவாயும் பயனிலையுமாய் இயைந்து, ஒரு சொன்னீர்மையவாய், அவை தாமென்னும் எழுவாய்க்குப் பயனிலையாயின. அஃதேல், உயர்திணை விரவுப் பெயரைப் பொருள்பற்றி உயர்திணைப் பெயர்க்கண் அடக்கினாரா லெனின், முன்னர் `விளம்பிய நெறிய விளிக்குங் காலை' (சொல் -150) எனல் வேண்டாவாம் பிறவெனின்:- நன்றுசொன்னாய்; `விளம்பிய நெறிய விளிக்குங் காலை' என்புழி, விரவுப்பெயரென்னாது அஃறிணை விரவுப் பெயரென அஃறிணைக்கண் வருவனவற்றை விதந்தோதுதலான், உயர்திணைக்கண் வருவன உயர்திணைப் பெயருள் அடங்கு மென்பதற்கு அச்சூத்திரமே கரியாயிற்றென்பது. அல்லதூஉம், புள்ளியீற்றுயர்திணைப் பெயர்க்கண் அவ்வீற் றுயர்திணை விரவுப் பெயரு மடங்கி விளிகோடலெய்துதலா னன்றே, தாம் நீயிரென்பன விளி கொள்ளாவென எய்தியது விலக்குவாராயிற்று; அதனானு மடங்குதல் பெறுதுமென்பது. அல்லதூஉம், உயர்திணையதிகாரத்து முறைப்பெயர் விளியேற்குமாறு கூறினமையானும் பெறப்படும். விரவுப் பெயரை உயர்திணைப் பெயரோடு மாட்டெறிப வாகலின், மாட்டேற்றான் முறைப் பெயர் ஆகாரமும் ஏகாரமும் பெற்று விளியேற்ற லெய்தாமையின் ஈண்டுக் கூறினாரென்றாரால் உரையாசிரியரெனின்:- அக் கருத்தினராயின் அஃறிணையென்னுஞ் சொல்லொழித்துக், `கிளந்த விறுதி யஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை' (சொல் -150) எனவும், இதன் பின், `முறைப்பெயர் மருங்கி னையெ னிறுதி யாவொடு வருதற் குரியவு முளவே' (சொல் -126) எனவும், இதன்பின் னகார ளகார வீற்றிருவகை முறைப்பெயரு மடங்கப் `புள்ளி யிறுதி யேயொடு வருமே' (சொல் -151) எனவும் ஓதுவார்மன் னாசிரியர். என்னை? மயங்கக் கூறலென்னுங் குற்றமும் நீங்கிச் சூத்திரமுஞ் சுருங்குமாதலான். அவ்வா றோதாமையானும், முறைப் பெயரே யன்றித் தாம் நீயி ரென்பனவும் ஈண்டுக் கூறப் பட்டமையானும், உரையாசிரியர்க்கு அது கருத்தன் றென்க. (3)
|