4.அஃறிணைப்பெயர் விளியேற்குமாறு

151புள்ளியு முயிரும் இறுதி யாகிய
அஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின்
தெளிநிலை யுடையஏகாரம் வரலே.

புள்ளியீறும் உயிரீறுமாகிய அஃறிணைப்பெயரெல்லாம் , விளி கொள்ளுங் காலந் தோன்றின் , ஏகாரம் பெறுதலைத் தெற்றெனவுடைய; எ- று.

எ - டு: மரம் , மரமே ; அணில் , அணிலே; நரி , நரியே ; புலி , புலியே என வரும்.

அஃறிணைப்பெயருள் விளிகேட்கும் ஒருசார் விலங்கின் பெயரும் , விளி கேளாதனவற்றைக் கேட்பனவாகச் சொல்லுவார் கருதியவாற்றான் விளயேற்பனவுமல்லது , ஒழிந்த பெயரெல்லாம் விளி யேலாமையின் , `விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின்' , என்றார் அதனானே சுட்டுப் பெயர் முதலாயின விளி யேலாமையுங் கொள்க.

தெளிநிலையுடைய ஏகாரம் வரலே என ஏகாரம் பெற்று விளியேற்றலை யாப்புறுப்பவே , யாப்புறவின்றிச் சிறு பான்மை பிறவாற்றான் விளியேற்பனவு முளவென்பதாம். `அவை வருந்தினை வாழியென்னெஞ்சம்' (அகம் - 16) `கருங்கால் வெண்குரு கொன்றுகேண்மதி' (நற்றி - 24) `காட்டுச் சாரோடுங் குறுமுயால்' `ஒண்டூவி நாராய்' என்னும் தொடக்கத்தன.

(34)