புறனடை

மூவகைப் பெயரிலும் சேய்மை விளி

152உளவெனப் பட்ட எல்லாப் பெயரும்
அளபிறந் தனவே விளிக்குங் காலைச்
சேய்மையி னிசைக்கும் வழக்கத்தான.

உயர்திணைக்கண்ணும் அஃறினைக்கண்ணும் விளியேற்பனவாகச் சொல்லப்பட்ட எல்லாப் பெயரும், விளிக்குமிடத்து, தத்தமாத்திரையி னிறந்திசைத்தனவாம்.சேய்மைக்கண் ஒலிக்கும் வழக்கத்தின்கண்; எ-று.

எ - டு: நம்பீ இ, சாத்தாஅ என வரும்.

அளபெடை மிகூஉம் என்றமையான், அளபெடைப் பெயரொழித்து நின்ற பெயர் கொள்க.

அளபிறந்தன என்றது, நெட்டெழுத்து அளபெடையாயும் அளபெடை மூன்று மாத்திரையினிறந்தும் , சேய்மைக்குத் தக்கவாறு நீண்டிசைக்கும் என்றவாறு.

சேரமான், மலையமான் என்னும் ஈற்றயல் அளபிறந்த வழி இயல்பு விளியென்னாது ஈற்றயல் நீண்டதாகக் கொள்க. அளபிறப்பன எழுத்தாகலின், ஒற்றுமை நயத்தாற் பெயரள பிறந்தன என்றார்.

(35)