நான்கு சொல்லும் பொதுவகையா ணுணர்த்தி, பொதுவிலக்கணமாத லொப்புமையானும் வேற்றுமை பெயரோடியைபுடைமையானும் பெயரிலக்கணத்திற்கும் பொதுவிலக்கணத்திற்கும் இடைவேற்றுமையிலக்கணமுணர்த்தி, இனிச்சிறப்புவகையான் நான்குசொல்லுமுணர்த்துவானெடுத்துக் கொண்டு, இவ்வோத்தான் அவற்றின் முதற்கண்ணதாகிய பெயரிலக்கண முணர்த்துகின்றார். அதனா னிது பெயரிய லென்னும் பெயர்த்தாயிற்று. பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் இடைச் சொல்லும் உரிச்சொல்லுமாகிய எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே, பொருள் குறியாது நில்லா ; எ-று. `ஆயிரு திணையி னிசைக்கும்' (சொல் - 1) என்றதனான் இது பெறப்படுதலின் இச்சூத்திரம் வேண்டாவெனின்:- அற்றன்று ; சொல்லிசைக்கும் பொருளாவன இவ்விரண்டு திணையுமே பிறிதில்லையென்ப தல்லது, சொல்லெல்லாம் பொருளுணர்த்துதன்மாலையவே, உணர்த்தாதனவில்லை யென்னும் யாப்புறவு அதனாற் பெறப்படாமையின், அசைநிலை முதலாயினவும் பொருள்குறித்து நிற்குமென ஐயமறுத்தற்கு இச்சூத்திரம் வேண்டுமென்பது. அசைநிலை முதலாயின பொருளுணர்த்துமாறு மேலே1 கூறிப்போந்தாம். முயற்கோடு, யாமைமயிர்க்கம்பலம் என்பனபொருளுணர்த்தாவாலெனின்:- அவை தொடர்மொழியாகலான் ஈண்டைக் கெய்தாவென்பது. அஃதேல், தொடர்மொழிதான் பொருள்குறியாது வருமோவெனின்:- வாரா. அவை மெய்ப்பொருள் குறிப்பனவும் பொய்ப் பொருள். குறிப்பனவுமென இருவகைப்படும். அவற்றுள், பொய்ப் பொருள் குறிப்பனவும் பொருளுணர்த்துவனவேயாம். அல்லாக்கால்2 இல்லோன்றலைவனாக வருந் தொடர்நிலைச் செய்யுள் பொருளுணர்த்தாமையின், அவை புலவராற் கொள்ளப்படாவென்பது. அஃதேல், இச்சூத்திரம் முதலாக ஐந்து சூத்திரத்தாற் கூறப்பட்டன பொதுவிலக்கண மாகலான், இவற்றை ஈண்டு வையாது கிளவியாக்கத்துள் வைக்கவெனின் :- இவை பொதுவிலக்கணமேயெனினும், ஆண்டுக் கூறப்பட்டன வழூஉக்காத்தலும் வழூஉக்காத்தற்கு உபகாரமுடையனவுமன்றே; `எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன' என ஐயமகற்றலும் சொற் பொருள் இணைத்துப் பாகுபடுமென்றலும் சொல்லினைத் தென்றலுமென வழூஉக்காத்தலும், வழூஉக்காத்தற் குபகார முடையனவு மன்மையான், ஆண்டுணர்த்தாது, பொருள் வேறுபாடுபற்றிச் சிறப்பு வகையான் நான்கு சொல்லு முணர்த்துங்கால் அவை யுணர்த்தியல்லது உணர்த்தலாகாமையின் அவற்றை யீண்டுணர்த்தினாரென்பது பொருள் வேறுபாடுபற்றிச் சொல் லுணர்த்துமாறு முன்னர்க் காணப்படும். (1)
1. மேலே என்றது கிளவியாக்கத்து முதல் நூற்பா வுரையுள். 2. கோவை முதலிய நூல்கள்.
|