5.பெயரியல்

சொற்களின் இயல்பு

சொல் தன்னையும் பொருளையும் உணர்த்தல்

156பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லி னாகும் என்மனார் புலவர்.

தன்னின் வேறாகிய பொருளறியப்படுதலும் பொருளறியப்படாது அச்சொற்றானே யறியப்படுதலும் இரண்டுஞ் சொல்லானா மென்று சொல்லுவர் புலவர்; எ-று.

எ - டு: சாத்தன் வந்தான், பண்டு காடு மன், உறு கால் என்பனவற்றால் பொருளுணரப்பட்டவாறும் நீயென் கிளவி செய்தெனெச்சம், தஞ்சக்கிளவி, கடியென் கிளவி என்பனவற்றாற் பொருளுணரப்படாது அச்சொற்றாமே யுணரப்பட்டவாறுங் கண்டுகொள்க.

`ஆயிறு திணையி னிசைக்குமன சொல்லே' `எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' (சொல் - 155)`ஈறு பெயர்க் காகும் இயற்கைய வென்ப' (சொல் - 69) என்புழிச் சொல்லென்னுஞ் சொல்லும் பெயரென்னும் பெயரும் அறியப் படுதற்கண் சொன்மை தெரிதலாம்; ஏனைச் சொல்லும் ஏனைப் பெயரு மறியப்படுதற்கண் பொருண்மை தெரிதலும் ஒருங்கு வந்தன எனப்படும். அல்லாக்கால், சொல்லென்னுஞ் சொற் பொருளுணர்த்துதலும் பெயரென்னும் பெயரிறுதியுருபு வருதலும் பெறப்படாவாமென்பது.

மேலைச் சூத்திரத்தாற் சொற்கள் பொருளுணர்த்து மென்பது பெறப்பட்டமையால், தானும் பிறுதுமெனப் பொருள் இரண்டு வகைப்படுமென அதனது பாகுபாடு உணர்த்தியவாறு

இதனாற் பயன், சொற் றன்னையுணர நின்றவழியுஞ் சொல்லேயாமென ஐயமறுத்தலாம்.

(2)