சொல்லாவன பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லுமென இரண்டென்றுசொல்லுவர் அறிந்தோர் ; எ-று. பெயர்ச்சொற்கிலக்கணம் வேற்றுமையோத்தினுட் கூறினார்; வினைச்சொற்கிலக்கணம் வினையியலுட் கூறுப. பிறசொல்லு முளவாயினும், இவற்றது சிறப்பு நோக்கிப் `பெயரே வினையென் றாயிரண் டென்ப' என்றார். இவற்றுள்ளும் பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழில் பற்றாது அப் பொருள்பற்றி வருஞ் சிறப்புடைமையாற் பெயரை முற்கூறினார். (4)
|