5.பெயரியல்

விரவு பெயர்கள்

பெயரீறு செய்யுளுள் திரிதல்

195ஆவோ வாகும் பெயருமா ருளவே
ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே.

ஆகாரம் ஓகாரமாய்த் திரியும் பெயர்களுமுள; அத்திரியுமிட மறிக செய்யுளுள ; எ-று.

எ - டு:

`வில்லோன் காலன கழலே தொடியோன்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்.
யார்கொ லளியர் தாமே (யாரியர்,
கயிறாடு பாறையில் கால்பொராக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்)
வேய்பயில் பழுவ முன்னி யோரே' (குறுந் - 7)

எனவும்,

`கழனி நல்லூர் மகிழ்நர்க் கென்னிழை
நெகிழப் பருவரல் செப்பா தோயே.' (நற்றிணை - 40)


எனவும் ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தவாறு கண்டுகொள்க.

ஆன், ஆள், ஆர், ஆய் என்னுமீற்றவாகிய பெயரல்லது, சேரமான், மலையமான் என்னுந் தொடக்கத்தன அவ்வாறு திரியாமையின், `ஆயிடனறிதல்' என்றார். உழாஅன், கிழாஅன் என்பனவோ வெனின்:- அவை அன்னீற்றுப்பெயர் ஒருமொழிப் புணர்ச்சியான் அவ்வாறு, நின்றனவென்பது. ஆனீறாயவழி, உழவோன், கிழவோன் எனத் திரியுமாறறிக.

(41)