செய்யுளுட் கருப்பொருண்மேற் கிளக்கப்படும் இருதிணைக்குமுரிய பெயர் உயர்திணை யுணர்த்தா: அவ்வவ் நிலத்துவழி அஃறிணைப் பொருளவாய் வழங்கப்பட்டு வருதலான் ; எ-று. எ - டு: `கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு வதுவை யயர்ந்த வன்பறழ்க் குமரி' என்புழி, கடுகன், மூலன், குமரியென்பன அஃறிணைப் பொருளவாயல்லது நிலத்து வழி மருங்கிற் றோன்றாமையின், உயர்திணை சுட்டாதவாறு கண்டுகொள்க. நிலமாவது, முல்லை குறிஞ்சி மருதநெய்தலென்பன. அஃதேல், இவை உயர்திணை யுணர்த்தாவாயின் அஃறிணைப் பெயரேயாம், ஆகவே இச்சூத்திரம் வேண்டா பிறவெனின்:- அற்றன்று; கடுவன் மூலனென்பன அன்னீறு ஆண்மையுணர்த்துமன்றே; அஃறிணைப் பெயர் அவ்வீற்றான் அப்பொருளுணர்த்தாமையின், அவை விரவுப் பெயரேயா மென்பது. அலவன் கள்வனென்பனவோவெனின்:- அவை சாதிப் பெயரெனப்படுவதல்லது ஆண்மைப் பெயரெனப்படா வென்க. குமரியென்பது, வடமொழிச் சிதைவாய் வடமொழிப் பொருளே உணர்த்தலின், விரவுப்பெயரேயாம். (42)
|