5.பெயரியல்

விரவு பெயர்கள்

உயர்திணை ஈறு அமைந்த விரவுப் பெயர்கள்

197திணையொடு பழகிய பெயரலங் கடையே.

கருப்பொருளுணர்த்தும் விரவுப்பெயர் உயர்திணை சுட்டாது அஃறிணை சுட்டுவ. அவ்வத்திணைக்குரியவாய் வழங்கப்பட்டு வரும் பெயரல்லாத விடத்து ; எ-று.

எனவே, திணைக்குரியவாய் வழங்கப்பட்டு வரும் பெயர் இருதிணையுஞ் சுட்டிவருமென்பதாம்.

திணையொடு பழகிய விரவுப்பெயராவன காளைவிடலை யென்னுந் தொடக்கத்தன.

எ - டு:`செருமிகு முன்பிற் கூர்வேற் காளை' எனவும், `திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே' (அகம்-195) எனவும், உயர்திணை சுட்டிவந்தவாறு கண்டுகொள்க. இவை உயர்திணைப் பொருளன்றோ வெனின்:- ஓரெருத்தையும் காளை விடலை யென்பவாகலின், விரவுப்பெயரெனவே படுமென்பது.

கடுவன், மூலன் குமரியென்பனவும் கருப்பொருளுணர்த்தலின் திணையொடு பழகிய பெயராம் பிறவெனின் :- அற்றன்று; விலங்கும் புள்ளு முதலாகிய பொருள்வழியெல்லாம் அவற்றிற்குரிய பெயர் சொல்வதல்லது, பொருளுண்டாயினும், இந்நிலத்து இப்பொருள் இப்பெயரால் வழங்கப்படாவென்னும் வரையறையில்லை. தலைமக்கள் எந்நிலத்து முளராயினும் பாலைநிலத்துக் காளை மீளியென்னும் பெயர் செல்லா மருத நிலத்து; மருத நிலத்து மகிழ்னன் ஊரனென்னும் பெயர் செல்லா பாலை நிலத்து, அதனாற் பொருள்வகையானன்றிப் பெயர் தந்திணைக்குரிமை பூண்டு நிற்றலின், அவற்றைத் திணையொடு பழகிய பெயரென்றாரென்பது.

(43)

பெயரியல் முற்றிற்று