6.வினையியல்

(வினைச் சொல்லின் இலக்கணம் உணர்த்துவது).

1.வினைச்சொல்லின் பொது வியல்பு

வினை இன்ன தென்பது

198வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.

நிறுத்த முறையானே வினைச்சொல்லாமா றுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதனா னிவ்வோத்து வினையிய லென்னும் பெயர்த்தாயிற்று.

வினையென்று சொல்லப்படுவது வேற்றுமையொடு பொருந்தாது ஆராயுங்காற் காலத்தொடு புலப்படும் ; எ-று.

ஈண்டு வேற்றுமை என்றது உருபை.

எ - டு:உண்டான், கரியன் என வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றியவாறு கண்டுகொள்க.

வேற்றுமை கொள்ளாதென்னாது காலமொடு தோன்றுமெனின் தொழினிலையொட்டுந் தொழிற்பெயரும் வினைச்சொல்லாவான் செல்லுமாகலானும், காலமொடு தோன்றுமென்னாது வேற்றுமை கொள்ளாதெனின் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொல்லெனப்படுமாகலானும், அவ்விருதிறமு நீக்குதற்கு `வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்' என்றார்.

வினைச்சொல்லுள் வெளிப்படக் காலம் விளக்காதனவுமுள; அவையும் ஆராயுங்காற் காலமுடைய வென்றற்கு, `நினையுங்காலை' என்றார். அவை யிவையென்பது முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும்.

உணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கண முணர்த்தியவாறு.

(1)