1.கிளவியாக்கம்

2.பால்

உயர்திணையில் மூன்றுபால்

2ஆடூஉ அறிசொல், மகடூஉ அறிசொல்
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே.

ஆடூஉ அறிசொல்லும் மகடூ அறிசொல்லும் பல்லோர் அறியுஞ் சொல்லொடு பொருத்தி,அம்மூன்று கூற்றுச் சொல்லும் உயர்திணையனவாம்; எ-று.

ஆண்மகனை ஆடூஉ என்றலும், பெண்டாட்டியை மகடூஉ என்றலும் பண்டையார் வழக்கு.

அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமையின் ஆடூஉ அறிசொல் முற்கூறப்பட்டது. பன்மை இருபாலும் பற்றி வருதலின் பல்லோரறிசொல் பிற்கூறப்பட்டது.

இரண்டாம் வேற்றுமை உயர்திணைக்கண் சிறுபான்மை தொகப்பெறுதலின், தொக்கு நின்றது. திரிந்த புணர்ச்சியன்மையின் விகார வகையால் தொக்கதென்பாரும் உளர்.

சிவணி என்னும் வினையெச்சம், உயர்திணைய என்னும் வினைக் குறிப்புக் கொண்டது,ஆறாம் வேற்றுமை ஏற்று நின்ற சொல் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்குமாகலான். உயர்திணைய1வாம் என்னும் முப்பாற் சொல்லின் வினை `ஆடூஉ அறிசொல்' `மகடூஉ அறிசொல்' என்னும் இரண்டன் வினையாகிய சிவணி என்னுஞ் செய்தென் எச்சத்திற்கு வினை முதல் வினையாயினவாறு என்னையெனின்;- உயர்திணையவதால். ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல் என்பனவற்றிற்கும் எய்துதலான், வினை முதல் வினையாம் என்க; `முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின (சொல் - 230) எனபுழி , வினைமுதல் வினையென்னுந் துணையல்லது பிறிதொன்றற்குப் பொதுவாகாது வினைமுதற்கே வினையாதல் வேண்டும் என்னும் வரையறையின்மையின் . அல்லாக்கால் `இவளும் இவனும் சிற்றிலிழைத்தும் சிறுபறை யறைந்தும் விளையாடுப' என்பன போல்வன அமையாவாம் என்க.

ஆடூஉ அறிசொல் முதலாயினவற்றை உணர்த்தியல்லது அவற்றது இலக்கணம் உணர்த்தலாகாமையின் , பால் உணர்த்தும் எழுத்து வகுப்பவே அவை தாமும் பெறப்படும்; இச்சூத்திரம் வேண்டா என்பது கடா அன்மை உணர்க.

உயர்திணைச் சொல் உணர்த்தி அதனது பாகுபாடு கூறுகின்றா ராகலின் `அம் முப்பாற்சொல் உயர்திணைய' என்றாராயினும் உயர்திணைச் சொல்மூன்று பாகுபாடு படும் என்பது கருத்தாகக் கொள்க. இக்குருத்தானன்றே , ஆசிரியர் அம் முப்பாற் சொல்லும் என இனைத்தென அறிந்த பொருள் தொகுதிக்குக் (சொல் - 33) கொடுக்கும் உம்மை கொடாரயினும் 2உரையாசிரியரும் உயர்திணையெனப் பட்ட பகுப்பை விரிப்புழி இத்துணையல்லது விரிபடாதென்பது ஈண்டுக்கூறியது என்றுரைத்ததூஉம் என்க 'ஆயிருபாற்சொல் அஃறிணை யவ்வே (சொல்-3) என்பதற்கும் ஈதொக்கும்.

(2)

1. உயர்திணைய என்பது வினைக்குறிப்பு முற்றாங்கால் அகரம் ஆறாம் வேற்றுமையுருபாகாது ; வினைக்குறிப்பு முற்று விகுதியேயாம் என்றறிக.

2. (பாடம்) கொடாராயின தூஉம்.