6.வினையியல்

வினைச்சொல்லின் பொது வியல்பு

வினைச் சொற்களின் வகை.

201குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறினைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே.

பொதுவகையாற் கூறியவினைச்சொல்லைச் சிறப்பு வகையானுணர்த்திய வெடுத்துக்கொண்டார்.

குறிப்புப் பொருண்மைக் கண்ணுந் தொழிற்பொருண்மைக்கண்ணுந் தோன்றிக்காலத்தோடு வரும் எல்லாவினைச் சொல்லும், உயர்திணைக்குரியனவும் அஃறிணைக்குரியனவனவும் இரண்டு திணைக்கும் ஒப்ப வுரியனவுமென, மூன்று கூற்றனவாம்; தோன்றுநெறீக்கண் ; எ-று.

கரியன், செய்யன் வன்புழித் தொழின்மை தெற்றென விளங்காது குறித்துக் கொள்ளப்படுதலிற் குறிப்பென்றார்.

எ - டு:உண்டான், கரியன், சென்றது, செய்யது; வந்தனை, வெளியை என வரும்.

`குறிப்பொடுங்கொள்ளும்' (சொல்-200) என மேற் குறிப்பியைபு பட்டு நிற்றலிற் குறிப்பினும் வினையினும் என்றார்.

முன் ஈறுபற்றி உணர்த்தப்படும் வினைச்சொற்களை இஃதிறந்த காலத்திற்குரித்து இது நிகழ்காலத்திற்குரித்து , இஃதெதிர்காலத்திற்குரித்து என வழக்கு நோக்கி, உணர்ந்து கொள்க வென்பது விளக்கிய, `காலமொடு வரூஉம்' என்றார்.

வினைச்சொற் காலமுணர்த்துங் காற்சிலநெறிப்பாடுடைய வென்பது விளக்கிய, `நெறிப்படத்தோன்றி' என்றார். நெறிப் பாடாவது அவ்வீற்றுமிசை நிற்கும் எழுத்து வேறுபாடு. அவை முற்றவுணர்த்தலாகாவாயினும், அவ்வீறுணர்த்தும் வழிச்சிறிய சொல்லுதும்.

(4)