நிறுத்த முறையானே உயர்திணைவினையாமா றுணர்த்துகின்றார். அவைதாம் இருவகைய; தன்மை வினையும் படர்க்கைவினையுமென. தன்மை வினையும் இருவகைத்து; பன்மைத் தன்மையும் ஒருமைத் தன்மையுமென. தனித்தன்மையும் உளப்பாட்டுத்தன்மையுமெனினு மமையும். இச்சூத்திரத்தாற் பன்மைத் தன்மை யுணர்த்துகின்றார். மேன் மூவகையவெனப்பட்ட வினைச்சொற்றாம், அம் ஆம் எம் ஏம் என்னுமீற்றவாகிய சொல்லும், உம்மொடு வரூஉம் கடதறவாகிய கும்மும் டும்மும் தும்மும் றும்மும் என்னுமீற்றவாகிய சொல்லுமென, அவ்வெட்டும் பன்மையுணர்த்துந் தன்மைச் சொல்லாம் ; எ-று. தனக்கு ஒருமையல்லதின்மையின் தன்மைப்பன்மையாவது தன்னொடு பிறரை உளப்படுத்தவேயாம். அவ்வுளப் படுத்தல் மூவகைப்படும்; முன்னின்றாரை உளப்படுத்தலும், படர்க்கையாரை உளப்படுத்தலும், அவ்விருவரையும் ஒருங்குளப்படுத்தலுமென. அம் ஆம் என்பன முன்னின்றாரை உளப்படுக்கும்; தமராய வழிப் படர்க்கையாரையும் உளப்பகுக்டும், எம் ஏம் என்பன படர்க்கையாரை உளப்படுக்கும் . உம்மொடு வரூஉங் கடதற அவ்விருவரையும் ஒருங்குளப்படுத்தலுந் தனித்தனியுளப்படுத்தலுமுடைய. ஈண்டும் அவைதாமென்பதற்கு முடிபு `அவைதாம் இ உ ஐ ஒ' (சொல் - 120 ) என்புழி உரைத்தாங் குரைக்க. அம், ஆம்; எம் , ஏம் என்பன மூன்று காலமும்பற்றி வரும். உம்மொடு வரூஉங் கடதற எதிர்காலம்பற்றி வரும். முன்னின்ற நான்கீறும் இறந்த காலம் பற்றி வருங்கால், அம்மும் எம்மும் கடதறவென்னு நான்கன் முன் அன் பெற்று வரும். ஆம் அன் பெறாது, வரும் . ஏம் அன் பெற்றும் பெறாது வரும். எ - டு:நக்கனம் நக்கனெம், உண்டனம் , உண்டனெம் உரைத்தனம் உரைத்தனெம் , தின்றனம் தின்றனெம் எனவும் நக்கனேம் நக்கேம் , உண்டனேம் உண்டேம், உரைத்தனேம் உரைத்தேம், தின்றனேம் தின்றேம் எனவும் ; நக்காம், உண்டாம், உரைத்தாம், தின்றாம் எனவும் வரும். அந்நான்கீறும் ஏனை யெழுத்தின்முன் ஙகாரமும் ழகாரமுமொழித்து இன்பெற்று வரும். எ - டு:அஞ்சினம், அஞ்சினாம் ; அஞ்சினெம், அஞ்சினேம் ; உரிஞினம் , உரிஞினாம் ; உரிஞினெம் , உரிஞினேம் என வரும் . பிறவெழுத்தோடு மொட்டிக் கொள்க. கலக்கினம், தெருட்டினம் என்னுந் தொடக்கத்தன குற்றுகரவீறாகலான், அதுவும் ஏனையெழுத்தேயாம். இனி அவை நிகழ்காலம்பற்றி வருங்கால் , நில் கின்று என்பனவற்றோடு வரும் .1 நில்லென்பது லகாரம் னகாரமாய் றகாரம் பெற்று நிற்கும். எ - டு:உண்ணாநின்றனம், உண்கின்றனம் ; உண்ணாநின்றாம் , உண்கின்றாம் ; உண்ணாநின்றனெம் , உண்கின்றனெம் ; உண்ணாநின்றேம் , உண்கின்றேம் ; உண்ணாநின்றனேம் , உன்கின்றனேம் என வரும். ஈண்டு அன் பெற்ற விகற்பம் இறந்த காலத்திற் கூறியவாறே கொள்க. உண்ணாகிடந்தனம், உண்ணாவிருந்தனம் எனக் கிட, இரு என்பனவுஞ் சிறுபான்மை நிகழ்காலத்து வரும். நிகழ்காலத்திற்கு உரித்தென்ற நில்லென்பது, உண்ணாநிற்கும் உண்ணாநிற்பல் என வெதிர்காலத்தும் வந்ததாலெனின் : - அற்றன்று ; `பண்டொருநாள் இச் சோலைக்கண் விளையாடா நின்றேன் அந்நேரத்தொரு தோன்றல் வந்தான்' என்றவழி, அஃதிறந்த காலத்து நிகழ்வுபற்றி வந்தாற்போல் ஆண்டெதிர் காலத்து நிகழ்வுபற்றி வருதலான் , ஆண்டும் அது நிகழ்காலத்திற் றீர்ந்தின் றென்க. அவை எதிர்காலம்பற்றி வருங்கால் பகரமும் வகரமும் பெற்று வரும். வகரமேற்புழிக் குகரமும் உகரமும் அடுத்து நிற்கும். எ - டு:உரைப்பம், செல்வம், உண்குவம் , உரிஞுவம் என வரும். ஒழிந்த வீற்றோடு மொட்டிக்கொள்க. பாடுகம், செல்கம் என ஏற்புழிச் சிறுபான்மை ககரவொற்றுப் பெறுதலுங் கொள்க. உம்மொடு வரூஉங் கடதற - உண்கும் , உண்டும், வருதும், சேறும் என வரும் . உரிஞுதும் திருமுதும் என ஏற்புழி உகரம் பெற்று வரும். கும்மீறு, வினைகொண்டு முடிதலின், ஒழிந்த உம்மீற்றின் வேறெனவே படும். டதற வென்பன, எதிர்காலத்திற்குரிய எழுத்தன்மையால், பாலுணர்த்தும், இடைச்சொற்கு உறுப்பாய் வந்தனவெனவே படும். படவே, அவற்றை உறுப்பாகவுடைய ஈறு மூன்றாம். அதனான் உம்மென ஓரீறாக வடக்கலாகாமையின், அந் நாற்கிளவியோட்டென்றார். (5)
1. செய்கின்ற என்னும் நிகழ்கால வினையெச்சம் நூற்பாவிற் கூறப்படாமையானும், செய்யும் என்னும் சொல்லையே பண்டை யுரையாசிரியர், நிகழ்காலத்திற்குக் காட்டினமையானும், முதற்காலத்தில் நிகழ்காலத்திற்குத் தனிச்சொல் இல்லையென்றும் , பின்பு , செய்கின்ற செய்யா நின்ற என்னுஞ் சொற்கள் தோன்றினவென்றும் ஊகிக்க இடமுண்டு. "கால், வழி , இடத்தென்பனவற்றின் நிகழ்காலத்து வாய்பாடு எதிர்காலத்திற்கு மேற்றலறிக" என்று சேனாவரையர் உரைத்ததை (சொல் - 229 உரை ) நோக்குக. "இனி, அவை நிகழ்காலம்பற்றி வருங்கால், நில், கின்று என்பனவற்றோடு வரும். நில்லென்பது லகாரம் னகாரமாய் றகாரம் பெற்று நிற்கும்." (சொல் - 202 . உரை). "உண்ணா கிடந்தனம், உண்ணா விருந்தனம் எனக் கிட, இரு என்பனவும் சிறுபான்மை நிகழ்காலத்து வரும்." ( ) என்று சேனாவரையரே கூறியிருப்பதால் செய்து நின்று எனப்பொருள்படும் செய்யா நின்று என்னும் தொடர்ச்சொல்லே ஒரு சொற்றன்மை பெற்று நிகழ் கால வினைச் சொல்லாயிற் றென்க. உண்ணா நின்று என்பதை உண் + ஆநின்று எனப் பிரித்தால் , உண்ணா கிடந்தனம் உண்ணா விருந்தனம் என்பனவற்றையும் உண் + ஆகிடந்து + அனம், உண் + ஆவிருந்து + அனம் எனப் பிரித்தல் வேண்டும். அங்ஙனம் பிரித்தல் கூடாமை அறிக. இரு ,கிட என்னும் வினைகள் எங்ஙனம் நிகழ்காலத்தை அமைக்கப் பயன் பட்டனவோ அங்ஙனமே நில் என்னும் வினையும் பயன்பட்ட தென்க. இனி, செய்கின்றான் என்பதிலுள்ள கின்று என்னும் இடை நிலையும் நின்று என்பதுபோல ஒரு காலத்தில் இறந்தகால வினையெச்சமாயிருந்ததே. கிற்றல் = ஆற்றுதல், செய்தல், கில் பகுதி. `கிற்பன் கில்லேன்' (திவ், திருவாய். 3,2) `கிற்றல்' (சிலப் , 16, 183) கிற்பு = செய்கை.
|