தத்தமெச்சமாகிய வினையோடும் பெயரோடும் இயையுங் குறிப்பையுடைய எச்சொல்லாயினும், இவ்வெச்செத்திற்கும் அவற்றான் முடிவனவாகிய தமக்கும், இடைநிற்றல் வரையார்; எ - று. எ - டு :உழுது சாத்தன் வந்தான், உழுதேரோடு வந்தான் எனவும்; கொல்லுங் காட்டுள் யானை, கொன்ற காட்டுள் யானை எனவும் வரும். சிவணுங்குறிப்பின் வரையாரெனவே, சிவணாக்குறிப்பின் வரைபவென்பதாம். சிவணாக்குறிப்பினவாவன; ஒரு தலையாக எச்சத்தோடியைந்து நில்லாது நின்ற சொல்லொடுந்தாமே யியைந்து கவர் பொருட்படுவன. உண்டு விருந்தொடு வந்தான்; வல்லமெறிந்த நல்லிளங் கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி என்றவழி விருந்தொடுண்டென வினையெச்சத்தோடு மியைதலிற் பொருள் கவர்க்கும்; வல்லமெறிதல் நல்லிளங் கோசர்க்கும் ஏற்குமாகலின் ஆண்டும் பொருள் கவர்க்கும்; அன்ன சிவணாக் குறிப்பினவாம். எச்சொல்லாயினு மென்றதனான், உழுதோடிவந்தான், கவளங்கொள்ளாக் களித்த யானை என எச்சமும் இடைநிலையாதல் கொள்க. சாத்தன் உண்டுவந்தான், அறத்தை யரசன் விரும்பினான், உண்டான் வந்த சாத்தான் என ஏனைத் தொடர்க்கண்ணும் பிறசொல் இடை நிற்ற லொக்குமாயினும், எச்சத்தொடர்க்கு இடை நிற்பனவற்றின் கண் ஆராய்ச்சியுடைமையாற் கூறினார். (40)
|