துணிந்து திட்பமெய்துதற்கு வரும் வினாவையுடைய வினைச்சொல் வினைநிகழ்வுணர்த்தாது எதிர்மறுத்துணர்த்துதற்கு உரித்ததாலு முடைத்து; வினாவாவன ஆ, ஏ, ஓ, என்பன. கதத்தானாக களியானாக ஒருவன் தெருளாது ஒருவனை வைதான்; அவன்றெருண்டக்கால், வையப்பட்டான் நீ யென்னை வைதாய் என்ற வழித்தான் வைதவை யுணரா மையான் வைதேனே யென்னும்; ஆண்டவ் வினாவொடு வந்த வினைச்சொல் வைதிலே னென்னும் எதிர்மறைப் பொருள்பட வந்தவாறு கண்டுகொள்க. வினாவொடு வந்தவழி எதிர்மறைப் பொருள்படுமா றென்னையெனின்:- சொல்லுவான் குறிப்பு வகையான் எதிர்மறைப்பொரு ளுணர்த்திற் றென்க. எதிர்மறைப் பொருளுணர்த்திற்று ஆண் டேகாரமாகலின், வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத் தென்றல் நிரம்பாதெனின்:- எதிர்மறையாயின பயன்றருவது வினாவுடை வினைச்சொலென்றா ராகலின், அஃதெதிர் மறுத்தல் யாண்டையதென மறுக்க. வினைநிகழ் வுணர்த்தற்பாலது வினையது நிகழாமை யுணர்த்துதல்வழுவாயினும் அமைகவென வினைச்சொற்பற்றி மரபுவழு வமைத்தவாறு. (47)
|