6.வினையியல்

விரவு வினை

இயற்கைப்பொருளிலும் தெளிவுப்பொருளிலும் காலம் மயங்குதல்

245வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை.

எதிர்காலத்துக்குரிய வினைச்சொற்பொருண்மை இயற்கையாதலும் தெளியப்படுதலும் சொல்லுமிடத்து இறந்த காலச் சொல்லானும் நிகழ்காலச் சொல்லானும் விளங்கத் தோன்றும்; எ - று.

இயற்கையென்பது பெற்றி முதலாயினவற்றா லுணரப் படுவது. தெளிவு நூற்றெளிவான் வருவது.

ஒருகாட்டின்கட் போவார் கூறைகோட்படுதல் ஒருதலையாகக் கண்டு இஃதியற்கையென்று துணிந்தான், கூறை கோட்படாமுன்னும், இக்காட்டுட்போகிற் கூறைகோட்பட்டான். கூறைகோட்படும் என்னும். எறும்பு முட்டை கொண்டு தெற்றி யேறின் மழை பெய்தல் நூலாற்றெளிந்தான், அவை முட்டைகொண்டு தெற்றி யேறியவழி, மழை பெய்யா முன்னும், மழை பெய்தது, மழை பெய்யும் என்னும். ஆண்டு எதிர்காலத்திற்குரிய பொருள் இறந்தகாலத்தானும் நிகழ்காலத்தானும் தோன்றியவாறு கண்டுகொள்க.

இது காலவழு வமைத்தவாறு.

(48)