6.வினையியல்

விரவு வினை

வேறிடத்தினும் காலம் மயங்குதல்

247இறப்பே எதிர்வே ஆயிரு காலமுஞ்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி.

இறப்பும் எதிர்வுமாகிய இரண்டு காலமும் மயங்குமொழிப் பொருளாய் விளங்கத் தோன்றும்; எ - று.

எ - டு : இவர் பண்டு இப்பொழிலகத்து விளையாடுவார்; நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான் பின், நீ யென்செய்குவை எனவரும்.

அவ்விரண்டுகாலமும் மயங்குமொழிப் பொருளாய்த் தோன்று மெனவே, அவற்றை யுணர்த்துஞ்சொன் மயங்கு மென்றவாறாம். அவை பெயரும் வினையுமாய் மயங்குதலின், மயங்கு வினைச்சொற் கிளவி யென்னாது பொதுப்பட `மயங்குமொழிக் கிளவி' என்றார்.

தோன்றுமென்பது பெயரெச்சமெனினு மிழுக்காது.

பண்டு விளையாடினார் என்றும் நாளை வருவன் என்று மன்றே கூறற்பாலது; அவ்வாறன்றித் தம்முண் மயங்கக் கூறினு மமைகவெனக் காலவழு வமைத்தவாறு.

(50)