நிறுத்த முறையானே இடைச்சொல்லுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதனான், இவ்வோத்து இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச் சொல்லாயிற்று. இடைச்சொல் என்று சொல்லப் படுவன பெயரொடும் வினையொடும் வழக்குப்பெற் றியலும்; தாமாக நடக்குமியல்பில;எ-று. `இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்றும்.'(சொல்-159) என்றதனான் இடைச்சொல் பெயரும் வினையுஞ் சார்ந்து வருதல் பெறப் பட்டமையால், பெயரொடும் வினையொடு நடைபெற்றியலுந் தமக்கியல்பில வென்றது, ஈண்டுப் பெயரும் வினையு முணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றை வெளிப்படுப்பதல்லது தமக்கெனப் பொருளுடைய வல்ல வென்றவாறாம். எ - டு : `அதுகொ றோழி காம நோயே' (குறுந்-5) எனவும், `வருகதில் லம்மவெஞ் சேரி சேர' (அகம் 276) எனவும், பெயரும் வினையுஞ் சார்ந்து அப்பொருளை வெளிப்படுத்தவாறு கண்டுகொள்க. சார்ந்து வருதல் உரிச்சொற்குமொத்தலின், தமக்கெனப் பொருளின்மை இடைச்சொற்குச் சிறப்பிலக்கணமாம். தமக்கியல்பிலவேயென்றது, சார்ந்தல்லது வாராவென வலியுறுத்தவாறு. பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலுந் தமக்கியல் பிலவெனப் பொதுப்படக் கூறியவதனால் சாரப்படுஞ் சொல்லின் வேறாய் வருதலேயன்றி, உண்டனன், உண்டான் எனவும்; என்மனார், என்றிசினோர் எனவும்; அருங்குரைத்து எனவும் அவற்றிற் குறுப்பாய் வருதலுங் கொள்க. இனி ஓருரை:- `இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்றும்' என்பதற்கு, சார்ந்து வருதலான் இடைச்சொல்லும் உரிச்சொல்லுஞ் சிறப்பில; இவையுட்படச் சொன்னான்காமென்பது கருத்தாகலின், இடைச்சொல் பெயரும் வினையுஞ் சார்ந்து வருமென்னும் வேறுபாடு அதனாற் பெறப்படாது. என்னை ?இடைச்சொல் பெயர்சார்ந்தும் உரிச்சொல் வினைசார்ந்தும் வரினும் அவற்றது சிறப்பின்மையுஞ் சொன் னான்காதலும் உணர்த்துதல் சிதையாதாகலான். அதனான் இடைச்சொல் பெயரும் வினையுஞ் சார்ந்து வருமென்பது இச் சூத்திரத்தாற்கூறல் வேண்டுமென்ப. அவ்வுரை யுரைப்பார் ` பெயரினும் வினையினு மெய்தடு மாறி ' (சொல் - 297) என்பதற்கும் பெயரும் வினையுஞ் சார்ந்தென்று பொலுளுரைப்ப. (1)
|