7.இடையியல்

பொதுவிலக்கணம்

இடைச்சொல் நிற்கும் இடமும் வேறுபாடும்

251அவைதாம்
முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலுந்
தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும்
அன்னவை யெல்லாம் உரிய வென்ப.

மேற்சொல்லப்பட்ட இடைச்சொல், இடை வருதலேயன்றி தம்மாற் சாரப்படுஞ் சொற்கு முன்னும் பின்னும் வருதலும், தம்மீறு வேறுபட்டு வருதலும், பிறிதோ ரிடைச்சொல் ஓரிடைச் சொன்முன் வருதலுமாகிய அத்தன்மைய வெல்லாம் உரிய; எ - று.

எ - டு : ` அதுமன் ' எனவும், ` கேண்மியா ' ( புறம் - 148) எனவும், சாரப்படுமொழியை முன்னடுத்து வந்தன. ` கொன்னூர்' (குறுரந் - 138) எனவும், `ஓஒவினிதே ' எனவும் பின்னடுத்து வந்தன . `உடனுயிர் போகுக தில்லத ' ( குறுந் - 57) என ஈறு திரிந்து வந்தது - ` வருகதில் லம்மவெஞ் சேரி சேர ' (அகம் - 270) என்பது பிறிதவணின்றது.

அவைதாமெனப் பொது வகையா னோக்கினாரேனும், இவ்விலக்கணம் இவ்வோத்தின்கண் உணர்த்தப்படும் அசை நிலை முதலாகிய மூன்றற்குமெனக் கொள்க.

அன்னவையெல்லா மென்றதனான், ` மன்னைச்சொல் ' (சொல் - 252) `கொன்னைச்சொல் ' ( சொல் - 254) எனத் தம்மை யுணர நின்றவழி ஈறு திரிதலும், ` னகாரை முன்னர் ' என எழுத்துச்சாரியை ஈனு திரிதலுங் கொள்க.

(3)