7.இடையியல்

சிறப்பிலக்கணம்

`தில்' என்னும் சொல்

253விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்று
அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே.

விழைவு குறித்து நிற்பதும், காலங்குறித்துநிற்பதும், ஆண்டொழிந்து நின்ற சொற்பொருளை நோக்கி நிற்பதுமெனத் தில்லைச்சொல் மூன்றாம்; எ-று.

எ - டு : `வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழியரிவையைப் பெறுகதில் லம்ம யானே.' (குறுந்-14)

என அவளைப் பெறுதற்க ணுளதாகிய விழைவின்கண் வந்த்து. `பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே' எனப் பெற்ற காலத் தறிகவெனக் காலங்குறித்து நின்றது. `வருகதில் வம்ம வெஞ் சேரி சேர' (அகம்-276) என வந்தக்கால் இன்னது செய்வலென்னும் ஒழியிசைப் பொருணோக்கிற்று.

(5)