7.இடையியல்

சிறப்பிலக்கணம்

`உம்' என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு.

284எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்.

எச்சவும்மையாற் றழுவப்படும் எஞ்சுபொருட் கிளவி உம்மையில் சொல்லாயின் அவ்வும்மையில் சொல்லை அவ்வும்மைத் தொடர்க்குப் பின் சொல்லாது முன் சொல்லுக ; எ - று.

எ - டு : சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் என வரும் . கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான் எனப் பிற்படக் கிளப்பின், முற்கூறியதனை விலக்குவதுபோன்று பொருள் கொள்ளாமை கண்டு கொள்க.

`அடகுபுலால் பாகு பாளிதமு முண்ணான்
கடல்போலுங் கல்வியவன்'
என்பது மது.

உம்மையடாதே தானே நிற்றலிற் செஞ்சொலென்றார்.

செஞ்சொலாயின் முற்படக் கிளக்க வெனவே, எஞ்சு பொருட் கிளவி உம்மையொடு வரிற் பிற்படக் கிளக்க வென்றவாறாம்.

(36)