7.இடையியல்

புறனடை

`உம்' `உந்து' ஆதல்

292உம்உந் தாகும் இடனுமார் உண்டே.

வினைசெயன் மருங்கிற் காலமொடு வருவனவற்றுள் உம்மீறு உந்நாய்த் திரிதலு முடைத்து ; எ - று.

எ - டு : `நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து' (புறம் - 295) எனவும் , `நாரரி நறவினாண் மகிழ்தூங் குந்து' எனவும் வரும்.

வினைசெயன் மருங்கிற் காலமொடு வரும் உம்மென்பது ஏற்புழிக் கோடலென்பதனாற் பெற்றாம்.

இடனுமாருண்டேயென்றது, இத்திரிபு பெயரெச் சத்திற் கீறாய வழியென்பது கருதிப்போலும் .

தம்மீறு திரிதன் முதலாயின இவ்வோத்தினுட் கூறப்படும் இடைச் சொற்கே யென்பது இதனானும் பெற்றாம் . வினையியலுள்ளுங் கூறப்படுமாயினும் , இடைச்சொற் றிரிபாகலான் ஈண்டுக் கூறலும் இயைபுடைத்தென்பது.

(44)