மேற்சொல்லப்பட்டனவன்றி யவை போல்வன பிறவரினும் , அவற்றைக் கிளந்த சொல்லினியல்பா னுணர்ந்து கொள்க ; எ - று. கிளந்தவற்றியலா னென்றது , ஆசிரியர் ஆணையா னன்றிக் கிளந்த வற்றையும் இன்னவென்றறிவது வழக்கினுட் சார்பும் இடமுங் குறிப்பும் பற்றியன்றே ; கிளவாதவற்றையும் அவ்வாறு சார்பும் இடமுங் குறிப்பும் பற்றி இஃதசை நிலை இஃதிசைநிறை இது குறிப்பால் இன்ன பொருளுணர்த்தும் என்றுணர்ந்து கொள்க வென்றவாறு. எ - டு : `சிறிதுதவிர்ந் தீக மாளநின் பரிசில ருய்ம்மார்' எனவும் , சொல்லென் றெய்ய நின்னொடு பெயர்ந்தே எனவும் , `அறிவார்யாரஃதிறுவழி யிறுகென' எனவும், `பணியுமா மென்றும் பெருமை' (குறள் - 978) எனவும் , `ஈங்கா குநவா லென்றிசின் யானே' (நற்றிணை - 55) எனவும் மாள தெய்ய என ஆம் ஆல் என்பனவும் அசைநிலையாய் வந்தன `குன்றுதொறாடலு நின்றதன் பண்பே' (திருமுருகா - 217) எனத்தொறுவென்பதுதான் சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமாதலுமுணர்த்தி நிற்கும் . ஆனம், ஏனம் , ஓனம் என்பன எழுத்துச் சாரியை. பிறவும் எடுத்தோதாத விடைச்சொல்லெல்லாம் இப்புறனடையாற் றழீஇக் கொள்க. (48) இடையியல் முற்றிற்று.
|