8.உரியியல்

பொது இலக்கணம்

கீழ்வருவன இன்ன உரிச்சொல் என்பது

298வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன.

வெளிப்பட்ட உரிச்சொல் கிளந்ததனாற் பயனின்மையிற் கிளக்கப்படா; வெளிப்பட வாரா உரிச்சொன் மேற்றுக் கிளந்தோதல்; எ - று.

`பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தி யெச்சொல்லாயினும் பொருள்வேறு கிளத்தல்' (சொல்- 297) என்றதனால் பயிலாதவற்றைப் பயின்றவற்றோடு சார்த்திப் பயின்றவற்றைப் பிறிதொன்றனோடு சார்த்தாது தம்மையே கிளந்தும் எல்லா வுரிச்சொல்லும் உணர்த்தப்படுமென்பது பட்டு நின்றதனை விலக்கி, பயனின்மையாற் பயின்ற உரிச்சொற் கிளக்கப்படாது பயிலாத உரிச்சொல்லே கிளக்கப்படுமென, வரையறுத்தவாறு.

(2)