பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருளுணர்த்துங்காற் படுமுறைமை யுணர்த்துகின்றார். ஒரு சொல்லை ஒரு சொல்லாற் பொருளுணர்த்திய வழி அப்பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாதெனப் பொருட்குப் பொருடெரியுமாயின் மேல், வருவனவற்றிற்கெல்லாம் ஈதொத்தலின், அவ்வினா இறைவரம்பின்றியோடும் அதனாற் பொருட்குப் பொருடெரியற்க எ - று. ஒரு சொற்குப் பொருளுரைப்பது பிறிதோர் சொல்லானன்றே; அச்சொற்பொருளும் அறியாதானை உணர்த்துமாறென்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தாற் பெறப்படும். (95)
|