உறு தவ முதலாயின சொற்கு மிகுதி முதலாயின பொருளாதல் வரலாற்று முறைமையாற் கொள்வதல்லது. அவை அப்பொருளாவதற்குக் காரணம் விளங்கத் தோன்றா எ - று. பொருளோடு சொற்கியைபு இயற்கை யாகலான் அவ் வியற்கையாகிய இயைபாற் சொற்பொரு ளுணர்த்துமென்ப ஒரு சாரார். ஒரு சாரார் பிற காரணத்தா னுணர்த்து மென்ப. அவற்றுண் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனாவதல்லது நம்மனோர்க்குப் புலனாகாமையின், மொழிப்பொருட் காரணமில்லை யென்னாது விழிப்பத் தோன்றா வென்றார்.அக்காரணம் பொதுவகையான் பலவாம்; அதனான் விழிப்பத்தோன்றாவெனப் பன்மையிற் கூறினார். உரிச்சொற்பற்றி யோதினாரேனும், ஏனைச் சொற் பொருட்கு மிஃதொக்கும். (67)
|